இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க சட்டதிருத்தம் - மந்திரிசபை ஒப்புதல்


இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க சட்டதிருத்தம் - மந்திரிசபை ஒப்புதல்
x

இலங்கையில் நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க கொண்டு வரப்பட்ட சட்டதிருத்தத்திற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் அதிபரின் வானளாவிய அதிகாரத்தை ரத்துசெய்து, நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் 21-வது சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த சட்ட திருத்தம் மந்திரிசபையில் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த 21-வது சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என சுற்றுலா மந்திரி ஹரின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இந்த 21-வது சட்ட திருத்தம் பல்வேறு சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடவும், அரசு பதவிகளை வகிக்கவும் இது தடை விதிக்கிறது.

இந்த 21-வது சட்ட திருத்தத்துக்கு ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த சட்ட திருத்தத்துக்கு பதிலாக நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம் என கூறிவருகிறது.

ஆனால் இந்த சட்ட திருத்தத்தில் உறுதியாக இருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சியினர், அதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story