அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிகம் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிகம் பாதிப்பு; உலக சுகாதார அமைப்பு
x

குரங்கம்மை பற்றிய தவறான தகவல்கள் பரவாமல் தடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.



ஜெனீவா,



உலக நாடுகளை கடந்த 2 ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று, தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், குரங்கம்மை என்றும் புதிய பாதிப்பு உலக நாடுகளில் பரவ தொடங்கியது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் தொற்று ஏற்பட்டது. இந்தியாவில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் கடந்த 23ந்தேதி கூறும்போது, உலக அளவில் கவனம் கொள்ளப்பட வேண்டிய ஒரு பொது சுகாதார நெருக்கடியாக சர்வதேச அளவில் பரவியுள்ள குரங்கம்மை பிரதிபலிக்கிறது. இதுவரை 75 நாடுகளில் பரவி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் உயிரிழந்து உள்ளனர் என கூறினார்.

இதனையடுத்து, குரங்கம்மை நோயை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.

இதுவரை உலக சுகாதார அமைப்பிற்கு 18 ஆயிரத்திற்கும் கூடுதலான குரங்கம்மை பாதிப்புகள் பற்றி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 78 நாடுகள் அடங்கும். இந்த பாதிப்புகளில் 70 சதவீதம் ஐரோப்பிய நாடுகளையும் மற்றும் 25 சதவீதம் அமெரிக்காவிலும் ஏற்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

கொரோனாவை பற்றி கடந்த காலங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. அது இணையதளத்தில் விரைவாக பரவி விடுகிறது. அதுபோன்று குரங்கம்மை பாதிப்புகள் பற்றிய தவறான தகவல்கள் பரவாமல் தவிர்க்கப்பட வேண்டும்.

அதனால், சமூக ஊடக தளங்கள், தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் செய்தி அமைப்புகள் எங்களுடன் பணியாற்றி, தீங்கு விளைவிக்கும் தகவல்கள் பரவி விடாமல் தடுக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story