சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் நியாயமற்றது- இம்ரான் கான் கண்டனம்

Image Courtesy: AFP
சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென கத்தியால் குத்தப்பட்டார்.
இஸ்லாமாபாத்,
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார்.
இதில், சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.
இந்தியாவில் பிறந்த சல்மான் ருஷ்டியின் "சாத்தானின் வசனங்கள்" என்ற புத்தகம் 1988 இல் வெளிவந்தது, அந்த புத்தகம் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய இம்ரான் கான், இந்த சம்பவம் பயங்கரமானது, துயரமானது. சல்மான் ருஷ்டி மீதான கோபம் புரிந்துகொள்ளக்கூடியது ஆனால் தாக்குதல் நியாயமற்றது என தெரிவித்துள்ளார்.






