பிலிப்பைன்சை பந்தாடிய 'நால்கே' புயல்: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு


பிலிப்பைன்சை பந்தாடிய நால்கே புயல்: பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு
x

பிலிப்பைன்சை பந்தாடிய 'நால்கே' புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல் மற்றும் சூறாவளிகள் தாக்குகின்றன. இவை மக்கள் மற்றும் கால்நடைகளை கொன்று, பண்ணைகள், வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்களை அழிக்கின்றன. இந்த சூழலில் பருவநிலை மாற்றத்தால் உலகம் வெப்பமடைந்து வருவதன் எதிரொலியால் பிலிப்பைன்சை தாக்கும் புயல்கள் அதிக சக்தி வாய்ந்ததாக மாறுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை 'நால்கே' என்கிற சக்தி வாய்ந்த புயல் நேற்று முன் தினம் தாக்கியது. குறிப்பாக இந்த புயல் அங்குள்ள மகுயிண்டனாவ் மாகாணத்தை பந்தாடியது. மணிக்கு பல கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் பல மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டன. சாலைகளில் வாகனங்கள் உருண்டன.

புயலை தொடர்ந்து பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. இடைவிடாது கொட்டிய பேய் மழையால் மகுயிண்டனாவ் மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகின. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. புயல் மழையை தொடர்ந்து பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. மலைப்பாங்கான சாலைகளில் பாறைகள் உருண்டு விழுந்தன.

இந்நிலையில் புயல், மழை மற்றும் வெள்ளம் தொடர்பான சம்பங்களில் 31 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story