பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; இஸ்ரேலுக்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம்


பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்; இஸ்ரேலுக்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம்
x
தினத்தந்தி 14 Oct 2023 9:54 AM GMT (Updated: 14 Oct 2023 10:40 AM GMT)

பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் கூறியுள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல் லெபனான் மீதும் நடத்தப்பட்டது. மற்றும் சிரியாவின் 2 விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடந்தது. லெபனானில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோ நிருபரான இசாம் அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டார். இஸ்ரேலிய படைகள் மற்றும் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல்லா இடையேயான சண்டையில் அவர் கொல்லப்பட்டு உள்ளார். இதுதவிர, பத்திரிகையாளர்கள் 6 பேர் காயமடைந்தும் உள்ளனர். இதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுபற்றி அல் ஜசீரா ஊடகம் வெளியிட்ட செய்தியில், இஸ்ரேல் பீரங்கியின் குண்டுவீச்சு தாக்குதலாலேயே அப்துல்லா கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்கள் என்பதற்கான மேலாடையை அணிந்திருந்தபோதும், பல்வேறு நிருபர்கள் மீது இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளன என குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்த தாக்குதலில் அல் ஜசீராவின் 2 நிருபர்கள் காயமடைந்து உள்ளனர். ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தன்னுடைய 2 நிருபர்கள் தாக்குதலில் காயமடைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனமும், கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சு தாக்குதல் நடந்தது என தெரிவித்து உள்ளது. அப்துல்லா லைவ் வீடியோ பதிவை வழங்கி கொண்டிருந்தபோது கொல்லப்பட்டார் என ராய்ட்டர்ஸ் தெரிவித்து உள்ளது.


Next Story