அரசை கவிழ்க்க முயற்சி? இலங்கை போராட்டங்களில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து விசாரணை


அரசை கவிழ்க்க முயற்சி? இலங்கை போராட்டங்களில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து விசாரணை
x

இலங்கையில் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து அரசை கவிழ்க்க முயன்ற போராட்டத்தில் அரசியல் தலைவர்களின் பங்கு குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.



கொழும்பு,

இலங்கையின் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற எம்.பி.க்கள் வாக்களித்து அவரை தேர்வு செய்தனர்.

முன்னதாக இந்த ஓட்டெடுப்பை தடுக்கும் வகையிலும், அரசை கவிழ்க்கும் வகையிலும் நாடாளுமன்றத்தை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். இதன் பின்னணியில் சில அரசியல் தலைவர்கள் இருந்தது தெரியவந்து உள்ளது.

இந்த சதி குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக டெய்லி மிரர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.

போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் ஒரு கும்பல் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து, எம்.பி.க்கள் ஓட்டுப்போடுவதை தடுக்க முயன்றதாகவும், அந்த கும்பல் சுப்ரீம் கோர்ட்டையும் கைப்பற்ற முயன்றதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சதியின் பின்னணியில் இருந்த அரசியல் தலைவர்கள், பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டு இருப்பதாக கூறியுள்ள டெய்லி மிரர் நிறுவனம், இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் சீனா-இலங்கை நட்புறவு சங்கம் சார்பில் சீன தேசிய தின கொண்டாட்டங்கள் கொழும்பில் நடந்தன. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் தினேஷ் குணவர்தனே, இலங்கைக்கு சீனா ஒரு சிறந்த நண்பன் என்று கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இலங்கைக்கு மிகவும் சிறப்பான ஒரு நண்பனாக சீனா இருந்து வருகிறது. எங்கள் மகிழ்ச்சியான நேரங்களிலும், துன்ப நேரங்களிலும் எங்களுடன் இருக்கும் நண்பர்' என்று தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கோடிக்கணக்கான நிதியுதவி வழங்கியிருக்கும் சீனா, அங்கு பல்லாயிரம் கோடி முதலீடுகளையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிகப் பெரிய கள் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக பனை மேம்பாட்டு வாரிய தலைவர் கிரிஷந்தா பதிராஜா தெரிவித்து உள்ளார்.

பனை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து உள்ளூர் நிறுவனம் ஒன்று ரூ.45 கோடி முதலீட்டில் தொடங்கியுள்ள இந்த தொழிற்சாலை இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்படும் எனவும், அப்போது இது உலகிலேயே மிகப்பெரிய கள் தொழிற்சாலையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.


Next Story