நாய் இறைச்சியை சாப்பிடும் நூற்றாண்டு கால பழக்கம்: தென்கொரியா எடுத்த அதிரடி முடிவு


நாய் இறைச்சியை சாப்பிடும் நூற்றாண்டு கால பழக்கம்:  தென்கொரியா எடுத்த அதிரடி முடிவு
x
தினத்தந்தி 9 Jan 2024 9:22 AM GMT (Updated: 9 Jan 2024 10:19 AM GMT)

தென்கொரியாவில் நாய் இறைச்சி சாப்பிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அரசு ஆலோசித்த போதே அதற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

சியோல்,

தென் கொரியாவில் நாய் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் மக்களிடையே பன்னெடுங்காலமாக நிலவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளிவைக்க தென் கொரியா அரசு நீண்ட காலமாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல், நாய் இறைச்சி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் பிராணி நல ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

நாய் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததையடுத்து, சட்டம் கொண்டு வர தென்கொரிய அரசு முடிவு செய்தது. அதன்படி, தென்கொரிய நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. ஒரு ஓட்டு கூட எதிர்ப்பாக விழவில்லை.

மொத்தம் உள்ள 208 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட நாய் கறி உண்பதற்கு தடை விதிக்கும் மசோதா, இனி கேபினட் கவுன்சில் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். கேபினட் கவுன்சில் ஒப்புதல் கிடைத்தவுடன் அதிபர் யூன் சுக் யியோலுக்கு அனுப்பி வைக்கப்படும். அதிபர் ஒப்புதல் அளித்ததும் தென்கொரியாவில் நாய்கறி சாப்பிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தடை விதிக்கப்படும்.


Next Story