#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு


#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2022 10:11 PM GMT (Updated: 2022-06-13T20:52:13+05:30)

கிழக்கு உக்ரைனில் பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ள ரசாயன ஆலை மீது குண்டு வீச்சு


Live Updates

 • 13 Jun 2022 2:50 PM GMT

  சீவிரோடோனெட்ஸ்க்,

  ரஷியப் படைகள் கிழக்கு உக்ரேனிய நகரமான சீவிரோடோனெட்ஸ்க் நகருக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பகுதியை தாக்கியதாக உக்ரேன் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

  சீவிரோடோனெட்ஸ்கிலிருந்து வெளியேறும் கடைசி பாலம் அழிக்கப்பட்டதாகவும், அங்குள்ள உக்ரேனிய படைகள் இப்போது சரணடைய வேண்டும் அல்லது இறக்க நேரிடும் எனவும் ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அங்கு இருந்து வெளியேற வேறு வழி இருப்பதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • 13 Jun 2022 11:38 AM GMT

  உக்ரைனில் குழந்தைகளின் கல்வியை ரஷியாவால் தடை செய்ய முடியாது; உக்ரைன் அதிபரின் மனைவி

  கீவ்,

  உக்ரைன் குழந்தைகளின் கல்வியை ரஷியாவால் ஒருபோதும் தடை செய்ய முடியாது என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா வலியுறுத்தி கூறினார்.

  ‘ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரேனிய மொழி பாடங்களை எவ்வளவு வேண்டுமானாலும் தடை செய்யலாம், எங்கள் ஆசிரியர்களை பயமுறுத்தலாம். ஆனால் அவர்கள் உக்ரேனிய கல்வியை ஒருபோதும் தடை செய்ய முடியாது’ என்று டெலிகிராமில் தெரிவித்தார். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூட கட்டிடங்களுக்கு பதிலாக, இடிபாடுகள் மட்டுமே எஞ்சி இருப்பதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

  செர்னிஹிவ் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு ஆல்பம் ஒன்றில் அங்குள்ள குழந்தைகள், தங்கள் சொந்த ஊரில் உடைந்த வீடுகளின் பின்னணியில் போஸ் கொடுப்பதைக் காண முடிந்தது. பள்ளி ஆண்டு முடிவடைவதை, ஒரு குழந்தை எப்படி நினைவில் கொள்ளக்கூடாதோ அவ்வாறு இது அமைந்துள்ளது வேதனைக்குரிய விஷயம். போர் நடந்தாலும் வாழ்க்கை தொடரும்.உக்ரேனிய குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி வழங்க உக்ரேனிய அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.

 • உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்துவிட்டோம் - ரஷியா
  13 Jun 2022 6:40 AM GMT

  உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்துவிட்டோம் - ரஷியா

  மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்து விட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

  மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் உள்ள கிடங்கை, ரஷியப் படைகள் கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக கூறியுள்ளது. அதனை மறுக்கும் வகையில், கருங்கடலில் இருந்து சோர்ட்கிவ் நகரின் மீது நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், ராணுவ தளவாடங்கள் சிறிதளவு சேதமடைந்ததாகவும், 22 பேர் காயமடைந்தனர் என்றும் டெர்னோபில் பிராந்திய ஆளுநர் கூறினார். மேலும், அங்கு ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 • 13 Jun 2022 12:30 AM GMT


  உக்ரைன் மீதான ரஷியாவின் போரின் எச்சங்கள் - கீவ் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்

  நாட்டில் நடைபெற்று வரும் போரின் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று உக்ரைன் தலைநகர் கீவில் திறக்கப்பட்டுள்ளது.

  ரஷியாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஏவுகணைகளின் எச்சங்கள், ரஷிய ராணுவம் பயன்படுத்திய மற்றும் விட்டுச் சென்ற செருப்புகள், டூத் பிரஸ்கள் மற்றும் பர்னர் போன்கள் வரை, இரண்டாம் உலகப் போரில் உக்ரைனின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 • 12 Jun 2022 11:41 PM GMT


  உக்ரேனிய ஆற்றின் மீது பாலத்தை ரஷியா தகர்த்தது, தப்பிக்கும் பாதையையும் துண்டித்தது

  உக்ரேனிய நகரமான செவெரோடோனெட்ஸ்க் நகரை ஆற்றின் குறுக்கே உள்ள மற்றொரு நகரத்துடன் இணைக்கும் பாலத்தை ரஷியப் படைகள் தகர்த்து, பொதுமக்களை வெளியேற்றுவதற்கான சாத்தியமான வழியைத் துண்டித்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ரஷியப் படைகள் நகரின் பெரும்பகுதியைக் கைப்பற்றியுள்ளன, ஆனால் ஒரு தொழில்துறை பகுதி மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்குமிடமாக இருக்கும் அசோட் இரசாயன ஆலை ஆகியவை உக்ரேனிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

  ஆனால் ரஷியர்கள் சிவர்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றின் மீது ஒரு பாலத்தை அழித்துள்ளனர், இது செவெரோடோனெட்ஸ்கை அதன் இரட்டை நகரமான லிசிசான்ஸ்க் உடன் இணைக்கிறது என்று லுஹான்ஸ்க் கவர்னர் செர்ஹி கெய்டாய் தெரிவித்துள்ளார்.

 • 12 Jun 2022 10:52 PM GMT


  இந்த மாதம் ரஷிய போரில் பலியானோர் எண்ணிக்கை 40,000 ஆக இருக்கலாம்: உக்ரைன் அதிபர்

  உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஜூன் மாதத்தில் ரஷிய இறப்புகள் 40,000 ஐ கடக்கக்கூடும் என்று கூறினார்.

  ரஷிய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து 109வது தினமான நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜெலென்ஸ்கி, மேற்கில் இருந்து மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான அழைப்பு விடுத்தார்.

 • 12 Jun 2022 10:13 PM GMT


  உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் 100 நாட்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது. தலைநகர் கீவை கைப்பற்றும் திட்டம் நிறைவேறாமல் போன நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷிய படைகள் மும்முரம் காட்டி வருகின்றன.

  அந்த வகையில் உக்ரைனின் உற்பத்தி மையமாக திகழும் தொழில் நகரமான செவிரோடொனெட்ஸ்க் நகரின் பெரும்பாலான பகுதிகளை ரஷிய படைகள் ஆக்கிரமித்துவிட்டன. இருப்பினும் அங்குள்ள மிகப்பெரிய ரசாயன ஆலை உக்ரைன் படை வீரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த ஆலையில் ஏராளமான பொதுமக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

  இந்த நிலையில் அந்த ஆலையை கைப்பற்ற ரஷிய படைகள் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. நேற்று அந்த ஆலையின் மீது ரஷிய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஆலையில் பெரிய அளவில் தீப்பற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

  இதனிடையே வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜெலன்ஸ்கி, கிழக்கு உக்ரைனை கைப்பற்ற முயலும் ரஷிய படைகளை உக்ரைன் வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு தடுத்து வருவதாகவும், இதன் மூலம் ரஷிய படைகளின் எதிர்பார்ப்பை உக்ரைன் வீரர்கள் முறியடித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.


Next Story