பிரேசில்: 3-வது முறையாக அதிபர் ஆகிறார் லூலா டி சில்வா


பிரேசில்: 3-வது முறையாக அதிபர் ஆகிறார் லூலா டி சில்வா
x

Image Courtacy: AFP

பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூலா டி சில்வா வெற்றி பெற்றார்.

பிரேசிலியா,

உலகின் 4-வது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த 2-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபா் ஜெயிா் போல்சனாரோ மீண்டும் போட்டியிட்டார்.

அவருக்கு எதிராக முன்னாள் அதிபரும், இடதுசாரி கட்சியான தொழிலாளா் கட்சியின் தலைவருமான லூலா டி சில்வா களம் இறங்கினார்.

இவர்களுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் லூலா டி சில்வா 47.9 சதவீத வாக்குகளும், போல்சனாரோ 43.6 சதவீத வாக்குகளும் பெற்றனா்.

இடதுசாரி தலைவர் வெற்றி

பிரேசில் அரசியலமைப்பு சட்டப்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 50 சதவீத வாக்குகளை பெற வேண்டும்.

அவ்வாறு இல்லாதபட்சத்தில் முதல் இரு இடங்களைப் பெற்றவா்கள் 2-ம் சுற்று தேர்தலில் போட்டியிடுவா். அதன்படி நேற்று முன்தினம் 2-வது சுற்று தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றிக்கு தேவையான 50 சதவீத வாக்குகளை பெற்று இடதுசாரி தலைவர் லூலா டி சில்வா வெற்றி பெற்றதாக அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

3-வது முறையாக அதிபர் ஆகிறார்

பதிவான வாக்குகளில் 99 சதவிகிதம் எண்ணப்பட்ட நிலையில், லூலா 50.9 சதவிகித வாக்குகளும், பொல்சொனாரோ 49.1 சதவிகித வாக்குகளும் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த வலதுசாரி தலைவரான ஜெயிர் போல்சனாரோவை தோற்கடித்து லூலா டி சில்வா வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 3-வது முறையாக பிரேசிலின் அதிபராகி உள்ளார். இதற்கு முன் அவர் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அதிபராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு காரணம்

1985-ல் பிரேசில் ஜனநாயகத்துக்கு திரும்பியதில் இருந்து பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் மீண்டும் போட்டியிட்டு தோல்வி அடைந்தது இதுவே முதல் முறையாகும்.

கருக்கலைப்பு மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகள், கொரோனா தொற்றை கையாண்ட விதம், அமேசான் மழைக்காடுகள் அழிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் காரணமாக போல்சனாரோ ஆட்சி மீது மக்களுக்கு கடும் அதிருப்தி நிலவியதாகவும், இதுவே அவரது தோல்விக்கு காரணம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள் வாழ்த்து

இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்று பிரேசிலின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள லூலா டி சில்வாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story