கழுத்து வரை ஐஸ் கட்டிகள்.. உறைய வைக்கும் குளிர்.. 3 மணி நேரம் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்


கழுத்து வரை ஐஸ் கட்டிகள்.. உறைய வைக்கும் குளிர்.. 3 மணி நேரம் தாக்குப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்
x

போலந்து நாட்டின் வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி படைத்த சாதனை தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

சாதாரண குளிர் என்றாலே நாம் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவோம். ஐஸ் கட்டிகளை சிறிது நேரம் கையில் பிடித்தால் சில நிமிடங்கள்கூட தாக்குப்பிடிக்க முடியாது. அதுவே, ஐஸ் கட்டிகளுக்குள் உடல் முழுவதும் மூழ்கியிருந்தால், குளிர் எப்படியிருக்கும்? என்பதை நினைத்தாலே நடுக்கம் ஏற்படும். அப்படி ஒரு குளிரில், அதுவும் அதிக நேரம் தாக்குப்பிடித்து புதிய சாதனை படைத்திருக்கிறார் போலந்து நாட்டைச் சேர்ந்த வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி.

இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரோமைன் வாண்டன்டோர்ப் 2 மணி நேரம் 35 நிமிடங்கள், 33 வினாடிகள் வரை ஐஸ் பெட்டிக்குள் நின்று தாக்குப்பிடித்ததே உலக சாதனையாக இருந்தது. அவர் 2020-ம் ஆண்டு இந்த சாதனையை படைத்தார். ஆனால், வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி 3 மணி, 28 வினாடிகள் வரை நின்று புதிய சாதனை படைத்துள்ளார்.

கண்ணாடி பெட்டிக்குள் வாலர்ஜன் ரோமனோவ்ஸ்கி நிற்க, அவரது கழுத்து வரை மூழ்கும் அளவுக்கு ஐஸ் கட்டிகள் கொட்டப்பட்டு, நேரம் கணக்கிடப்பட்டது. அப்போது லேசாக மழையும் பெய்துகொண்டிருந்தது. கடும் குளிர் மற்றும் தூறலுக்கு மத்தியில் அசராமல் நின்று, முந்தைய உலக சாதனையை கடந்தார். அப்போது இன்னும் சில நிமிடங்கள் அவர் தாக்குப்பிடிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட நீண்டநேரம் பெட்டிக்குள் நின்ற அவர், இறுதியாக 3 மணி நேரத்தை கடந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இந்த சாதனை தொடர்பான வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரோமனோவ்ஸ்கியின் சாதனை முயற்சி மற்றும் அவருக்கு முன் சாதனை படைத்தவர்கள் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.


Next Story