நிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா


நிலவில் சந்திரயான்-3 விண்கலம்; புகைப்படம் வெளியிட்ட நாசா
x
தினத்தந்தி 6 Sep 2023 3:53 PM GMT (Updated: 6 Sep 2023 4:21 PM GMT)

நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிற்கும் புகைப்படம் ஒன்றை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்து உள்ளது.

நியூயார்க்,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோவின் 'சந்திரயான்-3' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி ஏவப்பட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்த 'விக்ரம்' லேண்டர் ஆகஸ்ட் 23-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய 'பிரக்யான்' ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன என பிரக்யான் ரோவர் கண்டறிந்து, உறுதி செய்தது.

இந்நிலையில், நாசாவின் எல்.ஆர்.ஓ. எனப்படும் நிலவை ஆய்வு செய்யும் ஆர்பிட்டரில் உள்ள கேமிரா ஆனது, நிலவில் சந்திரயான்-3 விண்கலம் நிற்கும் புகைப்படம் ஒன்றை எடுத்து உள்ளது.

இதனை நாசா இன்று வெளியிட்டு உள்ளது. அதில், விக்ரம் லேண்டர் ஒரு கரும்புள்ளி போன்று காணப்படுகிறது. அதனை சுற்றி ஒரு வெளிச்ச வளையம் காணப்படுகிறது. 42 டிகிரி சாய்வான கோணத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

நிலவில் ஆராய்ச்சி பணியை மேற்கொள்ள கடந்த 2009-ம் ஆண்டு எல்.ஆர்.ஓ. ஏவப்பட்டது. 7 உபகரணங்களின் உதவியுடன் நிலவில் உள்ள பல தகவல்களை அது சேகரித்து தந்துள்ளது என நாசா கூறுகிறது.


Next Story