பொருளாதார மந்தநிலை: சொகுசு கப்பலில் சீனா செல்லும் அனைவருக்கும் இலவச விசா
சொகுசு கப்பலில் சீனாவுக்கு சுற்றுலா வரும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் இலவச விசா வழங்க உள்ளதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீஜிங்,
சீனாவில் கொரோனா பரவலுக்கு பிந்தைய பொருளாதாரம் பாதாளம்நோக்கி பாய்ந்தது. பொருளாதார சரிவை மீட்டெடுக்கும் வகையில் சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அது பலன் அளிக்கவில்லை.
மேலும் ரஷியா-உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக சீனா மறைமுகமாக செயல்பட்டு வருவதாக கூறி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்டவை அதன் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிப்பதால் அதன் பொருளாதாரம் மந்தநிலையை அடைந்தது.
இந்தநிலையில் சுற்றுலா மூலம் தங்களுடைய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி சொகுசு கப்பல்கள் மூலம் சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக விசா வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதிய சட்டம் ஒன்றும் இயற்றப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி சீனாவின் துறைமுக நகரங்களான ஷாங்காய் உள்ளிட்ட 13 நகரங்கள் வழியாக சொகுசு கப்பல்களில் பயணம் செய்து சீனாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் குடியேற்றத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாட்டின் கடற்கரை ஓரத்தில் உள்ள அனைத்து கப்பல் துறைமுகங்கள் வழியாக வெளிநாட்டு சுற்றுலா குழுக்கள் விசா இன்றி பயணக் கப்பல்களில் அனுமதிக்கும் கொள்கை அமலுக்கு வருகிறது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிநாட்டினர் மற்றும் சீன பயண முகமைகளால் அங்கீகாரம் பெறப்பட்ட சுற்றுலா குழுக்கள், ஷாங்காய், தியான்ஜின், குவாங்சோ, சன்யா உள்பட 13 சீன நகரங்களில் உள்ள கப்பல் துறைமுகங்கள் வழியாக சொகுசு கப்பல்களில் இலவசமாக சீனாவிற்குள் நுழையலாம். சுற்றுலா பயணிகள் சீனாவில் 15 நாட்களுக்கு மேல் தங்க முடியாது. சீனாவில் இருக்கும்போது, அவர்கள் கடலோர மாகாணங்கள், நகராட்சிகள் மற்றும் தன்னாட்சி பகுதிகள் மற்றும் பீஜிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.