தைவான் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்கும் சீனா!


தைவான் விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை எதிர்நோக்கும் சீனா!
x

தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை இந்திய அரசு ஆதரிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக சீன தூதர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

தைவான் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை இந்திய அரசு ஆதரிக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்தார்.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் பயணம் ஒரு ஆபத்தான அரசியல் ஆத்திரமூட்டல் நிகழ்வு என்று சீன தூதர் கண்டித்தார்.

தைவான் விவகாரம் குறித்து இந்தியாவின் ஆதரவை கோரிய அவர் கூறியதாவது:- "அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் பயணம், ஒரு ஆபத்தான அரசியல் ஆத்திரமூட்டலாகும், இது சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைத் தீவிரமாக மீறிய செயலாகும்.

மேலும், இது ஒரே சீனா என்ற கொள்கையையும், சீனா-அமெரிக்க கூட்டு அறிக்கைகளில் உள்ள விதிகளையும் மீறிய செயலாகும்.

தோல்வியை ஏற்கத் தயாராக இல்லாத அமெரிக்கா, மற்றவர்களுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் நெருப்பை மூட்டி உள்ளது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். ஒரு புதிய மற்றும் இன்னும் பெரிய நெருக்கடியை உருவாக்கும் முயற்சியில் தைவான் பிராந்தியத்தில் இராணுவ நிலைநிறுத்தத்தை அமெரிக்க அதிகரிக்கலாம் மற்றும் நிலைமையை மேலும் தீவிரமாக்கலாம்.

தைவான் விவகாரங்கள் மற்றும் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்துமாறு அமெரிக்காவை சீனா கேட்டுக் கொண்டது. நாங்கள் எங்கள் சொந்த இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து வருகிறோம், இது சட்டபூர்வமானது மற்றும் நியாயமானது.

ஒரே சீனா என்ற கொள்கையே சீன-இந்திய உறவுகளின் அரசியல் அடித்தளமாகும். ஒரே சீனா என்ற கொள்கையை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

1971 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை மீட்டெடுப்பதற்கு சீனக் குடியரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. இந்திய தரப்பின் நிலையை சீன தரப்பு பாராட்டுகிறது.

இந்தியத் தரப்பு ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்க முடியும், சீனாவின் நியாயமான நிலைப்பாட்டை புரிந்துகொண்டு ஆதரிக்க முடியும் என்று சீனா நம்பிக்கையுடன் உள்ளது" என்றார்.


Next Story