மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் இரட்டை தரநிலை இருக்க முடியாது - ஐ.நா. நிகழ்வில் இந்தியா வலியுறுத்தல்


மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் இரட்டை தரநிலை இருக்க முடியாது - ஐ.நா. நிகழ்வில் இந்தியா வலியுறுத்தல்
x

ஜனநாயக கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பங்களிக்கும் கல்வி முறையை உருவாக்க வேண்டும்.

நியூயார்க்,

மொராக்கோவின் நிரந்தர தூதரகம் மற்றும் இனப்படுகொலை தடுப்புக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட நிகழ்வு வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

வெறுக்கத்தக்க பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினத்தின் 1வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான இந்த உயர்மட்ட நிகழ்ச்சியில், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கலந்துகொண்டார்.

முன்னதாக, ஐநா பொதுச் சபை, மார்ச் 15ம் தேதியை இஸ்லாமிய மதவெறியை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினமாக அறிவிக்க ஒரு தீர்மானத்தை இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்றுக்கொண்டது.

ஆனால், ஒருசில மதங்களுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்து மதங்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறையை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதை வலியுறுத்தும் விதமாக இந்த கூட்டத்தில், இந்திய பிரதிநிதியின் உரை அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது:-

மதவெறியை எதிர்த்துப் போராடுவது ஒன்று அல்லது இரண்டு மதங்களை மட்டுமே உள்ளடக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாக இருக்கக்கூடாது. மதவெறியில் இரட்டை தரநிலை இருக்க முடியாது. இதை செய்யும் வரை, அத்தகைய சர்வதேச நோக்கங்களை ஒருபோதும் அடைய முடியாது.

இந்தியாவின் பன்முக கலாச்சாரம், பல நூற்றாண்டுகளாக, இந்தியாவில் தஞ்சம் அடையும் அனைவருக்கும், யூத சமூகம் அல்லது சவுராஸ்திரியர்கள் அல்லது திபெத்தியர்கள் என அனைவருக்கும் பாதுகாப்பான புகலிடமாக உள்ளது.

நமது தேசத்தின் இந்த அடிப்படை பலம் காலப்போக்கில் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் தாங்கி நிற்கிறது. சகிப்பின்மை மற்றும் வெறுப்புக்கு எதிரான மிகப்பெரிய அரணாக இருப்பது ஜனநாயகத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொள்வது.

பன்மைத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தில் ஒவ்வொரு மதமும் மதிக்கப்படுகிறது. அத்தகைய சமூகம், சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கம் இல்லாதது. ஜனநாயகம் மற்றும் பன்மைத்துவம் ஆகிய இந்த இரண்டு கொள்கைகளையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. மேலும் இந்த கொள்கைகளை கடைபிடிக்க அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா மிகப்பெரிய பலியாகி வருகிறது.பன்மைத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உண்மையிலேயே பங்களிக்கும் கல்வி முறையை நாடுகள் உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story