500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலையில் ஐரோப்பிய கண்டம்: எச்சரிக்கை தகவல்


500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலையில் ஐரோப்பிய கண்டம்:  எச்சரிக்கை தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2022 12:25 PM GMT (Updated: 2022-08-24T18:01:25+05:30)

500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலையை ஐரோப்பிய கண்டம் எதிர்நோக்கி உள்ளது என அதுபற்றிய அறிக்கை ஒன்று எச்சரிக்கை தெரிவிக்கிறது.லண்டன்,உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுகள் பல அலைகளாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக பொருளாதார தேக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, மக்கள் தொகையில் வீழ்ச்சி ஆகிய பின்விளைவுகளையும் சில நாடுகள் சந்தித்து உள்ளன.

இதனை தொடர்ந்து, மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் சில அரசுகள் மேற்கொண்டன. இதுதவிர, பருவகால மாற்றங்கள், இயற்கை பேரிடர் ஆகியவற்றாலும் நாடுகள் அடுத்தடுத்து பாதிப்புக்கு இலக்காகி வருகின்றன.

இந்த சூழலில், ஐம்பெருங் கண்டங்களில் ஒன்றான ஐரோப்பிய கண்டத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஐரோப்பிய ஒன்றிய கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பிய கண்டத்தில் 3-ல் 2 பங்கு பகுதிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

உள்நாட்டு கப்பல் போக்குவரத்து குறைந்து உள்ளது. மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சில வகை பயிர்களின் விளைச்சலும் குறைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, ஐரோப்பிய வறட்சி கழகம் வெளியிட்டுள்ள ஆகஸ்டு மாத அறிக்கை ஒன்றில், ஐரோப்பாவின் 47% பகுதிகள் எச்சரிக்கை நிலையில் உள்ளன. ஈரப்பதம் இன்றி மண் வறண்டு போய் காணப்படுகின்றன. 17% பகுதிகள் அபாயம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த பகுதிகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது. இந்த தகவலை ஐரோப்பிய ஆணையமும் மேற்பார்வை செய்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஐரோப்பாவின் பல பகுதிகளை வறட்சி கடுமையாக பாதிக்க தொடங்கி, ஆகஸ்டு தொடக்கத்தில் அது விரிவடைந்து, மோசமடைந்து உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

இதனால், நவம்பர் வரையில், மேற்கு பகுதியிலுள்ள ஐரோப்பிய-மத்திய தரை கடல் பகுதியில் சாதாரண நிலையை கடந்து, அதிக வெப்பம் மற்றும் வறட்சி நிலை காணப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த கோடை காலத்தில் பல ஐரோப்பிய நாடுகள் பல வாரங்களாக தொடர்ச்சியாக கடும் வெப்பத்தில் சிக்கி தவித்தன. இது வறட்சி நிலையை மோசமடைய செய்ததுடன், காட்டுத்தீ ஏற்படவும் வழிவகுத்தது. போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மொத்தம் ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வெப்ப அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவமும் ஏற்பட்டது.

இதுதவிர, மக்களின் சுகாதார பாதிப்புகளுக்கும் எச்சரிக்கை விடும் வகையில் சூழல் ஏற்பட்டது. பருவகால மாற்றத்தினை எதிர்கொள்வதற்கான கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டிய தேவையையும் வலியுறுத்தியது.

சமீபத்திய வறட்சி நிலை ஆனது, 500 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமடைந்து காணப்படுகிறது என ஐரோப்பிய ஆணையமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.
இந்த பகுதிகளில், 2022-ம் ஆண்டுக்கான மக்காள சோள விளைச்சல், இதற்கு முந்தின 5 ஆண்டுகளில் இருந்த சராசரி அளவை விட 16% கீழாக சென்றுள்ளது. இதேபோன்று, சோயாபீன்ஸ் மற்றும் சூரியகாந்தியும் முறையே 15% மற்றும் 12% என்ற அளவில் விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.

நிலத்தில் ஈரப்பதம் குறைந்து போனதுடன், நீரில் இருந்து எடுக்கப்படும் மின்உற்பத்தியும் பாதிக்கப்பட்டு உள்ளது. குளிர் சாதனங்களுக்கு தேவையான நீர் பற்றாக்குறையால் பிற மின் உற்பத்திகளும் கூட பாதிக்கப்பட்டு உள்ளன.

குறைந்த அளவிலான நீர்மட்டம் எதிரொலியாக, உள்நாட்டு கப்பல் போக்குவரத்திலும் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால், நிலக்கரி மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கூடிய கப்பல் போக்குவரத்தும் குறைந்து உள்ளது.

ஆகஸ்டு மத்தியில் பெய்த மழையால் நிலைமை சற்று தணிந்தபோதும், இடி, மின்னலுடன் மழை வந்து கூடுதல் பாதிப்புகளை சில பகுதிகளில் ஏற்படுத்தி சென்றது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story