ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தொடர் மழை; நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு


ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் தொடர் மழை; நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழப்பு
x

Image Courtesy : AFP

ருவாண்டாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.

கிகாலி,

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த ஆண்டு மே மாதத்ைத விட இந்த ஆண்டில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. இதனால் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அரசாங்கம் வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் மேற்கு மற்றும் வடக்கு ருவாண்டாவில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வென்சோரி, கேசிசி மலைப்பகுதிகளில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு பல வீடுகள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

மேலும் அங்குள்ள சேபேயா ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ருட்சிரியோ, ருபாவு, கோரோரெேரா உள்பட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஏராளமான வீடுகள் இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

இதற்கிடையே மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 129 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ருவாண்டாவின் மேற்கு மாகாண கவர்னர் பிரான்கோயிஸ் ஹபிடெகெகோ தெரிவித்தார்.


Next Story