பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்


பாகிஸ்தானில் இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்
x

கோப்புப்படம்

பாகிஸ்தானில் இந்து கோவில் மீது நேற்று மர்ம நபர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை சேர்ந்த சீமா என்ற பெண்ணுக்கும், இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்ற வாலிபருக்கும் பப்ஜி விளையாட்டு மூலம் காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து 4 குழந்தைகளுக்கு தாயான சீமா, கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, காதலர் சச்சினுடன் இணைந்து குடும்பம் நடத்தி வந்தார். இவர்கள் இருவரையும் கடந்த 4-ந் தேதி பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனிடையே சீமா பாகிஸ்தானில் இந்தியாவுக்கு ஓடிய விவகாரத்தில் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என உள்ளூரை சேர்ந்த ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் சமீபத்தில் மிரட்டல் விடுத்தன.

இந்த நிலையில் சிந்து மாகாணத்தின் காஷ்மோர் நகரில் உள்ள ஒரு கோவில் மீது நேற்று மர்ம நபர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவத்தை தொடர்ந்து கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.


Next Story