அடுத்த சோதனைக்கு தயார்நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட்..! எலான் மஸ்க் அறிவிப்பு


அடுத்த சோதனைக்கு தயார்நிலையில் ஸ்டார்ஷிப் ராக்கெட்..! எலான் மஸ்க் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2023 6:42 AM GMT (Updated: 21 Sep 2023 8:54 AM GMT)

ஸ்பேஸ்எக்ஸின் வலிமைமிக்க ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 'ஸ்டார் லிங்க்' செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை இந்த நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை தயாரித்துள்ளது. 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ராக்கெட்டுக்கு 'ஸ்டார்ஷிப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் கடந்த ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதனால் ராக்கெட் வெடித்து சிதறியது. பின்னர் தவறுகள் சரிசெய்யப்பட்டு சமீபத்தில் என்ஜின்கள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்ஏஏ) ஆய்வு செய்தது.

இதையடுத்து, ஸ்டார்ஷிப் ராக்கெட்டை மீண்டும் விண்ணில் செலுத்தி சோதனை செய்ய ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தயாராகி உள்ளது. வலிமைமிக்க ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுவதற்கு தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஆனால் எப்போது செலுத்தப்படும் என்பதை அறிவிக்கவில்லை.

இதுதொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் ஒரு வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், டெக்சாஸ் மாநிலம் போகா சிகாவில் உள்ள ஸ்டார்பேஸ் ஏவுதளத்தில் விண்கலத்துடன் ஸ்டார்ஷிப் ராக்கெட் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் (எப்ஏஏ) அனுமதி அளித்ததும் ராக்கெட் ஏவப்பட உள்ளது.


Next Story