'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' ஆங்கிலப்படத்துக்கு 7 ஆஸ்கார் விருது


எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ஆங்கிலப்படத்துக்கு 7 ஆஸ்கார் விருது
x

அமெரிக்காவில் நடைபெற்ற 95-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற ஆங்கிலப்படம் 7 ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றது.

வாஷிங்டன்,

உலகளவில் சினிமாவின் மிக உயர்ந்த விருதாக ஆஸ்கார் விருது கருதப்படுகிறது. 95-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இந்த விருதுக்காக உலகின் பல்வேறு மொழிகளின் சிறந்த திரைப்படங்கள் அந்தந்த நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்டன.

ஆஸ்கார் விருதுக்காக 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற ஹாலிவுட் திரைப்படமானது 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அவற்றுள் சிறந்த படம், இயக்குனர், நடிகை, துணை நடிகர், துணை நடிகை, படத்தொகுப்பு மற்றும் சிறந்த கதை ஆகிய 7 பிரிவுகளில் விருதுகளை குவித்தது.



முதல் ஆசிய பெண்

சிறந்த நடிகர் என்ற விருதினை 'தி வேல்' என்ற திரைப்படத்தில் நடித்த பிரெண்டனும், சிறந்த நடிகைக்கான விருதினை 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற படத்தில் நடித்த மிச்செலி யோவும் தட்டிச் சென்றனர். இவரே ஆசியாவில் இருந்து சிறந்த நடிகையாக விருதினை பெற்றுள்ள முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

அவதார்-2

உலக மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவதார்-2 படமானது சிறந்த விஷூவல் எபெக்ட் என்ற பிரிவில் விருதினை பெற்றது.

சிறந்த ஒப்பனைக்கான விருதினை ஹாலிவுட் படமான 'தி வேல்' பெற்றுள்ளது. மேலும் ஆடை வடிவமைப்பு பிரிவில் 'பிளாக் பேந்தர்' படத்தின் இரண்டாம் பாகம் விருதினை வென்றுள்ளது.

வேற்று மொழியைத் தழுவிய சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கார் விருதை 'விமன் டாக்கிங்' திரைப்படத்திற்காக சாரா பொலி வென்றார். இதுதவிர சிறந்த இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன.


Next Story