தேடுபொறியில் மெகா அப்டேட்.. ஏ.ஐ. வழங்கும் பதில்களை பயன்படுத்த தயாராகும் கூகுள்


கூகுள் தேடல் முடிவுகள் பக்கத்தின் மேல் பகுதியில் ‘ஏஐ ஓவர்வியூ’ இடம்பெறும்.
x

முழுமையாக மேம்படுத்தப்பட்ட ‘ஏ.ஐ. ஓவர்வியூஸ்’ இந்த வாரம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை கூறினார்.

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறது. அவ்வகையில், பெரும் வரவேற்பை பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.). தொழில்நுட்பத்தை கூகுள் தேடுபொறியில் புகுத்தியிருக்கிறது. ஏ.ஐ. உருவாக்கிய பதில்களை தேடுபொறியில் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேடுபொறிக்கான மிகப்பெரிய அப்டேட்களில் இதுவும் ஒன்று.

கலிபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது இந்த தகவலை கூகுள் தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை அறிவித்தார்.

முழுமையாக மேம்படுத்தப்பட்ட 'ஏ.ஐ. ஓவர்வியூஸ்' இந்த வாரம் அமெரிக்காவில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் பிற நாடுகளிலும் இந்த அம்சம் வழங்கப்படும் என்றும் சுந்தர் பிச்சை கூறினார்.

இந்த மாற்றம் செய்யப்பட்டபின், கூகுளின் பல தேடல் முடிவுகளில், மேல் பகுதியில் 'ஏஐ ஓவர்வியூ' இடம்பெறும். அதற்கு கீழே வழக்கமான லிங்க் மற்றும் பொதுவான பிற தகவலகள் வரிசையாக இடம்பெறும். ஏ.ஐ. பதில்களை, கூகுளின் ஜெமினி ஏ.ஐ. தொழில்நுட்பம் வழங்கும். நாம் கேட்கும் தகவலை வழங்கிய ஆன்லைன் ஆதாரங்களுக்கான லிங்க்குகளுடன் ஒரு பத்தி அல்லது இரண்டு விளக்கங்களை வழங்குகிறது.

ஆராய்ச்சி முதல் திட்டமிடல் வரை, உங்கள் மனதில் உள்ளதையோ, அல்லது நீங்கள் செய்ய வேண்டியதையோ கேட்டால் போதும். அவற்றுக்கு தீர்வு வழங்குவதற்கான மற்ற வேலைகள் அனைத்தையும் கூகுள் கவனித்துக் கொள்ளும் என்கிறார் கூகுள் நிறுவன தேடுபொறி பிரிவின் தலைவர் லிஸ் ரீட்.

இப்படி எல்லா வசதிகளையும் ஒரே பக்கத்தில் கூகுள் வழங்கிவிட்டால், அவற்றின் மூல இணைய பக்கங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். இதனால், படைப்பாளர்களும், சிறிய இணையதள உரிமையாளர்களும் கூகுளின் இந்த மாற்றத்தை அறிந்து பதற்றமடைந்துள்ளனர். பயனர்கள் தகவலை படிப்பதற்காக இணையதளங்களில் கிளிக் செய்ய மாட்டார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story