பணய கைதிகளாக சிறை பிடித்த 2 அமெரிக்கர்களை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு


பணய கைதிகளாக சிறை பிடித்த 2 அமெரிக்கர்களை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு
x

ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்ற 2 அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லைக்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டதுடன், பலரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவம் தரை, வான் மற்றும் கடல் வழியேயான தாக்குதலை நடத்த திட்டமிட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், தெற்கு இஸ்ரேலின் எல்லையருகே காசாவை முற்றுகையிடும் வகையில், நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை இஸ்ரேல் குவித்துள்ளது. இந்த தரைவழி தாக்குதல் பல வாரங்கள் நீடிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பணய கைதிகளை விடுவிக்கும் முயற்சியும், பேச்சுவார்த்தையும் நடந்து வருகின்றன. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறும்போது, பணய கைதிகளை மனிதநேய காரணங்களுக்காக விடுவிக்கிறோம் என உலகத்திற்கு இந்நேரத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு காட்டி கொள்கிறது.

ஆனால் உண்மையில், நாங்கள் ஒரு கொலைகார குழுவுடன் பேசி கொண்டு இருக்கிறோம். புதிதாக பிறந்த குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், பெண்கள் மற்றும் முதியோர்களை அவர்கள் சிறை பிடித்து வைத்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.

இதன்படி, ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் 2 அமெரிக்க பெண்மணிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் என தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரும் சிகாகோவை சேர்ந்தவர்கள்.

ஜுடித்துக்கு உடல்நல பாதிப்பு என்பதற்காக மனிதநேய அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனினும், இதுவரை 200 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்துள்ளனர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை கடுமையாக விமர்சித்து இருக்கிறது.


Next Story