ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்ப உதவி: இந்திய தூதரகம் உறுதி


ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்ப உதவி:  இந்திய தூதரகம் உறுதி
x

வேலையில் திருப்தியில்லை என்றால் இந்தியாவுக்கு திரும்பி செல்லலாம் என்று பரீடாவிடம் ஷெனாஸ் கூறியுள்ளார் என பரீடாவின் சகோதரி பமீடா கூறியுள்ளார்.

மஸ்கட்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் கோல்கொண்டா பகுதியை சேர்ந்தவர் பரீடா பேகம் (வயது 48). இவரை துபாயில் உள்ள ஷெனாஸ் பேகம் என்ற பெண் வீட்டு வேலைக்காக பணியமர்த்தி உள்ளார். இதற்காக, தங்குமிடம் மற்றும் உணவு கொடுக்கப்படும் என்றும், இதுதவிர 1,400 திர்ஹாம் (ஏறக்குறைய ரூ.31,700) சம்பளம் அளிக்கப்படும் என்றும் உறுதி கூறப்பட்டு உள்ளது.

இந்த வேலையில் திருப்தியில்லை என்றால் சொந்த நாட்டுக்கு திரும்பி செல்லலாம் என்றும் பரீடாவிடம் ஷெனாஸ் கூறியுள்ளார் என பரீடாவின் சகோதரி பமீடா கூறியுள்ளார்.

இதன்படி, கடந்த ஆண்டு நவம்பர் 4-ந்தேதி 30 நாட்கள் செல்லத்தக்க பார்வையாளர் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பரீடா பேகம் சென்றிருக்கிறார். அரபு குடும்பம் ஒன்றில் வீட்டு வேலையில் ஈடுபட தொடங்கினார். ஒரு மாதம் கழித்து பரீடாவுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், இந்தியாவுக்கு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளார். ஆனால், பரீடாவின் பாஸ்போர்ட்டை ஷெனாஸ் பேகம் தராமல் பதுக்கி வைத்திருக்கிறார். பரீடாவின் உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதன்பின் ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்கு பரீடாவை, ஷெனாஸ் கடத்தி சென்றுள்ளார். இதனால், பமீடாவால் சகோதரியை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதுபற்றி மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந்தேதி பமீடா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தன்னுடைய சகோதரியை மீட்டு, இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரும்படி அரசிடம் உதவி கோரியிருக்கிறார்.

இந்நிலையில், ஓமனில் உள்ள இந்திய தூதரகம், எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், பரீடா பேகத்திடம் தூதரக அதிகாரிகள் பேசி உள்ளனர். உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளது. இதனால், தனது சகோதரியை காணும் நம்பிக்கையுடன் பமீடா காத்திருக்கிறார்.


Next Story