ரஷியா-உக்ரைன் போரால் இறக்குமதி பாதிப்பு - துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு


ரஷியா-உக்ரைன் போரால் இறக்குமதி பாதிப்பு - துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு
x

ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக துனிசியாவின் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

துனிஸ்,

வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை சமாளிக்க அந்நாட்டு அரசு சர்வதேச நாணய நிதியத்திடம் சுமார் 2 பில்லியன் டாலர்கள் கடன் உதவி கோரியுள்ளது.

இதனிடையே ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், துனிசியாவில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக அந்நாட்டின் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

அங்கு சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் துனிஸ்-ல் உள்ள எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட வரிசைகளில் அணிவகுத்து நிற்கின்றன.

இதனிடையே துனிசியாவில் மொத்த எண்ணெய் தேவையில் 3-ல் ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், தினசரி 35 ஆயிரம் பேரல்கள் மட்டுமே எண்ணெய் உற்பத்தி நடைபெறுவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அங்கு தினசரி நுகர்வுக்கு 90 ஆயிரம் பேரல்கள் எண்ணெய் தேவைப்படும் நிலையில், எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை அரசு செய்யவில்லை என்றால் துனிசியாவில் எரிபொருள் விநியோக தட்டுப்பாடு பல வாரங்களுக்கு நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.


Next Story