வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்


வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை வெளியிட்டு இந்தியாவை பாராட்டிய இம்ரான் கான்
x

Image Courtesy: PTI/AFP 

ஜெய்சங்கரின் வீடியோவை லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காண்பித்து இம்ரான் கான் பேசியுள்ளார்.

இஸ்லாமாபாத்,

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் வீடியோவை லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் காண்பித்து பேசியுள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இத்தகைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதற்கு பாகிஸ்தானின் தவறான வெளியுறவுக்கொள்கைகளே காரணம் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் இது தொடர்பாக லாகூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான் பேசியதாவது:

"இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே சமயத்தில்தான் சுதந்திரம் பெற்றது. இருந்த போதிலும் இந்தியா தனது மக்கள் நலனுக்கான உறுதியான நிலைப்பாட்டுடன் தனக்கெனெ ஒரு சுதந்திரமான வெளியுறவுக்கொள்கையை வகுக்க முடிகிறது.

ஆனால், ஷெபாஸ் ஷெரீப் அரசாங்கத்தால் இது முடியவில்லை. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவுக்கு அமெரிக்கா உத்தரவிட்டது. அமெரிக்காவின் மிக முக்கிய கூட்டாளி இந்தியாதான், பாகிஸ்தான் கிடையாது. ஆனாலும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று அமெரிக்கா கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என்ன சொன்னார் என்று பாருங்கள்".

இவ்வாறு பேசிய இம்ரான் கான் பின்னர் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கச்சா எண்ணெய் விவகாரம் தொடர்பாக பேசும் வீடியோவை ஒளிபரப்பி காட்டினார்.

பின்னர் பேசிய இம்ரான் கான், "அமெரிக்காவிடம் இதை சொல்ல நீங்கள் யார்? என்று கேட்ட ஜெய்சங்கர், ரஷ்யாவிடம் இருந்து எரிவாயுவை ஐரோப்பிய நாடுகள் வாங்குகின்றன. மக்களுக்கு தேவைப்படுவதால் நாங்கள் எண்ணெய் வாங்குகிறோம். சுதந்திர நாடு என்றால் இதுதான் என அவர் தெரிவித்தார்.

நான் ஆட்சியில் இருந்த போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவது பற்றி அந்நாட்டிடம் பேசினேன். ஆனால், தற்போது ஆட்சியில் உள்ள அரசுக்கு இந்த துணிச்சல் இல்லை" என இம்ரான் கான் தெரிவித்தார்.


Next Story