பலூசிஸ்தானில் தொடர் மழை: 7 அணைகள் உடைந்தன; 124 பேர் பலி


பலூசிஸ்தானில் தொடர் மழை:  7 அணைகள் உடைந்தன; 124 பேர் பலி
x

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தில் தொடர் மழையால் 7 அணைகள் உடைந்தும், 124 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.



பலூசிஸ்தான்,



பாகிஸ்தானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் அழிந்து போயுள்ளன.

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளின்றி திறந்த வெளியிலேயே வசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய அனைத்தும் சேதமடைந்து விட்டன என்று ஏ.ஆர்.ஒய். நியூஸ் தகவல் தெரிவித்து உள்ளது.

அதேவேளையில், மாகாண பேரிடர் மேலாண் கழகம் கூறும்போது, பலூசிஸ்தான் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல அணைகளில் நீர் நிரம்பி வருகின்றன. இந்த சூழலில் கனமழையால் 7 அணைகள் உடைந்து விட்டன. கச்சோ நகரில் 30 கிராமங்கள் மற்றும் இணைப்பு சாலைகள் நீரில் மூழ்கிவிட்டன. மலை பகுதியில் 50 கிராமங்கள் வரை நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த ஜூனில் இருந்து பெய்து வரும் மழையால் மொத்தம் 124 பேர் உயிரிழந்து உள்ளனர். மாகாணத்தில் 10 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து உள்ளன. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. 712 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன என மாகாண முதன்மை செயலாளர் அப்துல் அஜீஸ் உகைலி கூறியுள்ளார்.


Next Story