உக்ரைன் விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்துகிறது: புதின்


உக்ரைன் விவகாரம்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்துகிறது: புதின்
x

உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா, இந்தியா தொடர்ந்து கூறி வருகின்றன என்று புதின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. போர் இன்று 234-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா, கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷியா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது.

இந்த இணைப்பை தொடர்ந்து உக்ரைன் - ரஷியா இடையேயான மோதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனிடையே, போரில் தற்போது உக்ரைன் படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகிறது. ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகிறது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரஷ்யா - மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புடின் பங்கேற்கிறார். இம்மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கிறார்

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து ரஷ்ய அதிபர் புதின், " உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என சீனா, இந்தியா தொடர்ந்து கூறி வருகின்றன. அவர்களின் நிலைப்பாடு எங்களுக்கு தெரிகிறது. இந்தியாவும் சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள். அவர்களின் நிலைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்தார்.


Next Story