இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல்: இலங்கை சென்றடைந்தது


இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல்: இலங்கை சென்றடைந்தது
x

இந்தியா அனுப்பிவைத்த 40 ஆயிரம் டன் பெட்ரோல் நேற்று இலங்கை சென்றடைந்தது.

கொழும்பு,

அன்னிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் வாங்க முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. எரிபொருள் வாங்குவதற்காக இலங்கைக்கு கடந்த பிப்ரவரி மாதம் ரூ.3 ஆயிரத்து 750 கோடியும், கடந்த மாதம் அதே தொகையும் இந்தியா கடனாக வழங்கியது.

இதன்கீழ், ஏற்கனவே பல தவணைகளாக பெட்ரோல், டீசலை இந்தியா அனுப்பிவைத்தது. கடந்த 21-ந் தேதி 40 ஆயிரம் டன் டீசலை இந்தியா வழங்கியது.

இந்தநிலையில், இந்தியா மேலும் 40 ஆயிரம் டன் பெட்ரோலை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது. அந்த கப்பல், நேற்று கொழும்பு சென்றடைந்ததாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த மக்கள், பெட்ரோல் நிலையங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஒரு பெட்ரோல் நிலைய உரிமையாளரின் வீட்டுக்கு தீவைத்தனர்.

இதையடுத்து, பெட்ரோல், டீசல் கொண்டு செல்லும் வாகனங்களை மறித்து அச்சுறுத்தல் விடுத்தால், எரிபொருள் வினியோகத்தை நிறுத்தி விடுவோம் என்று இலங்கை எரிசக்தி மந்திரி காஞ்சனா விஜேசேகரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய மலையக பகுதியில் உடல்நிலை சரியில்லாத 2 வயது பெண் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வாகனத்துக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை. இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்தியாவசியம் அல்லாத பணியாளர்கள் வீட்டிலேயே தங்கி பணியாற்ற வேண் டும் என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வீட்டில் இருந்து நாடாளுமன்றத்துக்கு வர எரிபொருள் இல்லாததால், தாங்கள் ஓட்டலில் தங்க ஏற்பாடு செய்யுமாறு சபாநாயகரிடம் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.


Next Story