தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் நெரிசலில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்!


தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் நெரிசலில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது: மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்!
x

தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுடெல்லி,

தென்கொரிய தலைநகர் சியோலில் இதாவோன் என்ற பகுதியில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த திருவிழாவானது உயிரிழந்த முன்னோர்கள், புனிதர்கள், உற்றார் உறவினர்களை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது. அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹாலோவீன் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

இந்தாண்டு அந்த விழாவை கொரோனா கட்டுப்பாடுகள் இன்றி நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இடாவோன் பகுதியில் நேற்றிரவு சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். அப்போது குறுகிய வீதி ஒன்றில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

மூச்சுத்திணறல் காரணமாக 150க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20-30 வயதுடைய இளைஞர்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கொடூர சம்பவம் உலகையே உலுக்கி உள்ளது.

இந்த நிலையில், தென்கொரிய தலைநகர் சியோலில் ஹாலோவீன் நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;-

சியோலில் கூட்ட நெரிசலில் சிக்கி பல இளைஞர்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் கொரியா குடியரசுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story