ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய டிரைவருக்கு அடித்த யோகம்... லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு


ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய டிரைவருக்கு அடித்த யோகம்... லாட்டரியில் ரூ.44 கோடி பரிசு
x
தினத்தந்தி 3 Jan 2024 9:23 AM GMT (Updated: 3 Jan 2024 10:42 AM GMT)

துபாய்க்கு சென்றதில் இருந்தே ஃபைரோஸ் லாட்டரி வாங்கி வந்துள்ளார். ஆனால் ஒருமுறை கூட இவருக்கு பரிசு விழுந்ததது இல்லையாம்.

துபாய்,

வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் ஏராளமானோர் பணி செய்து வருகிறார்கள். டிரைவர் முதல் கட்டுமான பணிகள் வரை பல்வேறு வேலைகளில் இந்தியாவை சேர்ந்த பலரும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியர்கள் மட்டும் இன்றி ஆசிய நாடுகளை சேர்ந்த பலரும் அரபு நாடுகளில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வருவதை காண முடியும்.

அந்த வகையில், இந்தியாவை சேர்ந்த முனவர் ஃபைரோஸ் துபாயில் டிரைவராக பணியாற்றி வருகிறார். துபாய்க்கு சென்றதில் இருந்தே அங்கு விற்பனை செய்யப்படும் லாட்டரிகளை வாங்கும் பழக்கம் இவருக்கு இருந்துள்ளது. ஆனால், ஒருமுறை பரிசுத்தொகை அடித்தது இல்லை. இருந்தாலும் சளைக்காமல் என்றைக்காவது ஒருநாள் தனக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் என்ற நம்பிக்கையில் லாட்டரிகளை வாங்கி வந்துள்ளார்.

கடைசியில் அவர் நினைத்தபடியே நம்பிக்கை வீண் போகவில்லை. அதாவது, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் பம்பர் பரிசாக 44 கோடி ரூபாய் முனவர் ஃபைரோஸ்க்கு கிடைத்துள்ளது. இந்த லாட்டரியை ஃபைரோஸ் வாங்குவதற்கு 30 பேர் நிதி உதவி செய்துள்ளனர். இதனால், பைரோஸ் தனக்கு பரிசாக கிடைத்த 44 கோடியை 30 பேருக்கும் பகிர்ந்தளிக்க உள்ளார்.

இவ்வளவு பெரிய தொகை தனக்கு லாட்டரியில் அடித்ததை தன்னால் நம்பவே முடியவில்லை என்று சொல்லும் பைரோஸ் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். லாட்டரியில் பரிசுத்தொகை அடித்த இந்தியரான முனவர் ஃபைரோஸ் குறித்த வேறு எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.


Next Story