இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு..!


இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு..!
x

இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார்.

இந்த சூழலில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது. இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோத்தபய பதவிக்காலமான 2024 வரை ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியில் நீடிப்பார்.

இந்த நிலையில் இலங்கை அதிபர் தேர்தலில் அரசியல் தலையீடு குறித்து பரவும் தகவல்களுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிறநாடுகளின் உள் விவகாரம் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் இந்தியா தலையிடுவதில்லை என்று கூறியுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் வாக்களிப்பு தொடர்பாக இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்குடன் இந்தியாவிலிருந்து அரசியல் ரீதியான அழுத்தம் வழங்கப்பட்டதாக ஆதாரமற்றதும் ஊகங்களின் அடிப்படையிலும் வெளியாகியிருக்கும் ஊடக அறிக்கைகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த ஊடக அறிக்கைகள் முழுக்க முழுக்க பொய்யானதென நாம் திட்டவட்டமாக மறுக்கின்றோம். சிலரது கற்பனையின் தோற்றப்பாடாகவே இவ்வாறான அறிக்கைகள் அமைகின்றன.

ஜனநாயக வழிமுறைகள், நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியலமைப்பு விதிகள் ஆகியவற்றுக்கு அமைவாக தமது அபிலாஷைகளை நனவாக்க விரும்பும் இலங்கை மக்களுக்கு இந்தியா ஆதரவளிப்பதாகவும் இன்னொரு நாட்டின் உள்விவகாரங்கள் மற்றும் ஜனநாயக நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தி கூறப்படுகின்றது" என்று கூறியுள்ளது.


Next Story