பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல்: இம்ரான் கான் மீதான வழக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணை!


பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல்: இம்ரான் கான் மீதான வழக்கு இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இன்று விசாரணை!
x

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பிடிஐ கட்சி தலைவருமான இம்ரான் கான் பெண் நீதிபதியை மிரட்டியதாக புகார் எழுந்தது.

இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், போலீசாரால் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது ஆதரவாளரான ஷாபாஸ் கில்லை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், கில் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சட்டினார். மேலும், தனது கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஷாபாஸ் கில்லை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிட்ட பெண் நீதிபதி ஆகியோரை மிரட்டும் வகையில் பேசினார்.

அவரது உரை நாடு முழுவதும் செய்தி சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பான நிலையில், இம்ரான்கானின் உரையை அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் நேரலையில் ஒளிபரப்ப பாகிஸ்தான் ஊடக அமைப்பு தடை விதித்தது.

இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (ஏடிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் அதிகாரிகள், நீதிபதி உள்ளிட்டோரை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான்கான் மீது பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து இம்ரான் கான் மீதான வழக்கை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு முடிவு செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமின்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இம்ரான்கான் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இம்ரான்கானுக்கு வரும் 25-ம் தேதி வரை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு மந்திரி மரியம் அவுரங்கசீப் கூறுகையில், "பிடிஐ தலைவர் இம்ரான் கானை சிறையில் அடைத்து நேரத்தை வீணடிப்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் இம்ரான் கானின் கைது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.எல்லாம் சட்டத்தின்படி நடக்க வேண்டுமே தவிர, அரசியல் சுயநலத்திற்காக அல்ல.நாட்டின் முன்னேற்றத்துக்காக அரசு பாடுபடுகிறது" என்றார்.

இந்நிலையில், இம்ரான் கான் கைதுக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான ஆசிப் அலி சர்தாரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த கைது ஆளும் கூட்டணிக்கு அரசியல் சேதத்தை ஏற்படுத்தும் என அவர் நம்புகிறார்.

இந்நிலையில், இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி எதிர்த்ததாக எழுந்த ஊகங்களையும் மந்திரி மரியம் அவுரங்கசீப் மறுத்துள்ளார்.

ஆனால், முன் ஜாமின் காலமான 25-ம் தேதி நிறைவடைந்த பின்னர் இம்ரான்கான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசியலில் உச்சபட்ச பரபரப்பு நிழவி வருகிறது.


Next Story