நீதித்துறை மறுசீரமைப்பை எதிர்த்ததால் இஸ்ரேல் ராணுவ மந்திரி பதவி நீக்கம்


நீதித்துறை மறுசீரமைப்பை எதிர்த்ததால் இஸ்ரேல் ராணுவ மந்திரி பதவி நீக்கம்
x

இஸ்ரேலில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை கைவிடும்படி கூறியதால் ராணுவ மந்திரியை பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு பதவி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

நீதித்துறை மறுசீரமைப்பு மசோதா

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் சமீபத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு மசோதாவை அறிமுகப்படுத்தினார்.

இந்த மசோதா நீதித்துறையின் அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் அளிக்க வகைசெய்கிறது. இதனால் இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து பல வாரங்களாக லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். வரலாறு காணாத இந்த போராட்டம் இஸ்ரேலை ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

பிரதமர் பிடிவாதம்

போராட்டங்களில் அவ்வப்போது வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஆனால் இதனை சற்றும் பொருட்படுத்தாத பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு இந்த சட்டத்தை கொண்டு வருவதில் பிடிவாதமாக இருந்து வருகிறார்.

இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ மந்திரி யோவ் கேலண்ட் சர்ச்சைக்குரிய நீத்துறை மசோதாவை கைவிடும்படி அரசை வலியுத்தினார். யோவ் கேலண்டின் இந்த பேச்சு பெஞ்சமின் நேட்டன்யாகு அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

ராணுவ மந்திரி பதவி நீக்கம்

இந்த நிலையில் ராணுவ மந்திரி யோவ் கேலண்டை பதவி நீக்கம் செய்து பிரதமர் பெஞ்சமின் நேட்டன் யாகு அதிரடி நடவடிக்கை எடுத்தார். இது அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெஞ்சமின் நேட்டன் யாகுவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அவருக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. யோவ் கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானதும் தலைநகர் டெல் அவிவ் உள்பட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

மசோதாவை கைவிட வலியுறுத்தல்

இதனிடையே பிரதமரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக அதிகாரி அசாப் ஜமீர் பதவி விலகினார். மேலும் வெளிநாடுகளில் உள்ள இஸ்ரேல் நாட்டினரும் பெஞ்சமின் நேட்டன்யாகுவுக்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சட்டமாசோதாவை கைவிடும்படி இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகுவை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், `அரசியல் முரண்பாடுகளை விட தேச நலனே முக்கியம். எனவே நாட்டில் மீண்டும் அமைதி நிலவ இந்த சர்ச்சைக்குரிய மசோதாவினை கைவிட வேண்டும்' என்றார். அதிபரின் கருத்துகள் அந்த நாட்டின் அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story