வடகொரியா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி

கோப்புப்படம்
வடகொரியா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் கடல்பகுதியில் முத்தரப்பு போர்ப்பயிற்சி நடத்தப்பட்டது.
டோக்கியோ,
கொரிய தீபகற்ப பகுதியில் தொடர் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் ஹ்வாசாங்-18 என்ற கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியாவை சேர்ந்த 4 தனிநபர்கள் மற்றும் 3 நிறுவனங்கள் மீது தென்கொரியா தடை விதித்தது.
இந்தநிலையில் தற்போது ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை இணைந்து முத்தரப்பு போர்ப்பயிற்சியை நடத்தியது. இதன்மூலம் 3 நாடுகளும் தங்களது பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அபாயகரமான ஏவுகணைகளுக்கு எதிரான தாக்குதல் திறனை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும் என தென்கொரியா தெரிவித்தது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் முத்தரப்பு ஏவுகணை பாதுகாப்பு பயிற்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.






