'ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம்' - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்


ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம் - ஜோ பைடன் பேச்சால் தலீபான்கள் கோபம்
x

Image Courtacy: AFP

ஆப்கானிஸ்தான் கடவுளால் கைவிடப்பட்ட இடம் என்று ஜோ பைடன் கூறியதால் தலீபான்கள் கோபமடைந்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு ராணுவத்துக்கு பக்கபலமாக இருந்து வந்த தனது படைகளை அமெரிக்கா கடந்த ஆண்டு திரும்பப் பெற்றதை தொடர்ந்து, அந்த நாடு தலீபான்களின் கைக்கு சென்றது. தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை கடந்துள்ள நிலையில், அந்த நாட்டு மக்கள் வறுமை, அடக்குமுறை போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ நகரில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று உரையாற்றிய அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் குறித்து பேசினார். அப்போது அவர், "உங்களில் பலர் ஆப்கானிஸ்தானுக்குச் சென்றிருக்கிறீர்கள். நான் அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்றிருக்கிறேன். அது கடவுளால் கைவிடப்பட்ட இடம். மீண்டும் சொல்கிறேன் ஆப்கானிஸ்தான் கடவுள் கைவிட்ட ஒரு இடம்" என்றார்.

ஜோ பைடனின் இந்த கருத்து ஆப்கானிஸ்தான் மக்களை புண்படுத்தியுள்ளது. குறிப்பாக அந்த நாட்டை ஆட்சி செய்து வரும் தலீபான்கள் ஜோ பைடன் பேச்சால் கோபமடைந்துள்ளனர்.

அவரது இந்த கருத்துக்கு பதிலளித்த தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், "அமெரிக்காவில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோற்கக்கூடும் என்ற பயத்திலும், விரக்தியிலும் அவர் இவ்வாறு பேசுகிறார். அதோடு இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுபவர்கள் ஆப்கானிஸ்தான் மீதான விரக்தி மற்றும் பொறாமையால் அவ்வாறு செய்கிறார்கள். தலீபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் ஆப்கானிஸ்தானில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் திரும்பியுள்ளன. மேலும் ஆப்கான் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சாதாரணமாகச் செய்கிறார்கள்" என கூறினார்.


Next Story