கென்யா: 191 குழந்தைகள் கொடூர படுகொலை வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதிவு


கென்யா:  191 குழந்தைகள் கொடூர படுகொலை வழக்கில் கிறிஸ்தவ பாதிரியார் மீது குற்றச்சாட்டு பதிவு
x

மெக்கன்சிக்கு எதிராக பயங்கரவாதம், மனித படுகொலை மற்றும் குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி என்ற கடலோர நகரம் அமைந்து உள்ளது. இந்த பகுதியில், நற்செய்தி (குட் நியூஸ்) சர்வதேச கிறிஸ்தவ ஆலயத்தின் பாதிரியாரான பால் மெக்கன்சி என்பவரை சிலர் கும்பலாக பின்பற்றி வந்து உள்ளனர்.

அந்த குழுவினரிடம் சொர்க்கத்திற்கு போக வேண்டும் என்றால் பட்டினி கிடக்கும்படி கூறப்பட்டு உள்ளது. அவர்களும் அதனை உண்மை என நம்பி பட்டினியாக கிடந்து உள்ளனர். சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என நினைத்து உள்ளனர்.

இந்த சூழலில், ஆலயம் அமைந்த இடத்தில், ஷகாகோலா வன பகுதியில் சிலரது உடல்கள் புதைந்து கிடக்கின்றன என ரகசிய தகவல் தெரிய வந்து போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று உள்ளனர். இதில், குறிப்பிட்ட இடத்தில் இருந்து தோண்ட, தோண்ட உடல்கள் கிடைத்தபடி இருந்தது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. 90-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்தன.

அவர்களில் 15 பேரை போலீசார் மீட்டு, காப்பாற்றினர். அவர்களில், 4 பேர் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது உயிரிழந்து விட்டனர். இதுபற்றிய தொடர் விசாரணையில் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் காவலில் இருந்தபோது கூட சாப்பிடவோ அல்லது குடிக்கவோ, மெக்கன்சி மறுத்தது ஆச்சரியம் ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரலில் இருந்து அவர் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து 800 ஏக்கர் வன பகுதி முழுவதும் சீல் வைத்து மூடப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தில், பால் மெக்கன்சிக்கு எதிராக மலிண்டி ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இதில் மெக்கன்சி மற்றும் சந்தேகத்திற்குரிய 29 நபர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. எனினும், அவர்கள் அனைவரும் எந்த குற்றமும் செய்யவில்லை என இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

அவர்களில் ஒருவர், விசாரணையை எதிர்கொள்ள மனதளவில் சரியாக இல்லை. எனினும், மெக்கன்சிக்கு எதிராக பயங்கரவாதம், மனித படுகொலை மற்றும் குழந்தைகளுக்கு கொடூரம் இழைத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அவருக்கு எதிரான விசாரணை வருகிற மார்ச் 7-ந்தேதி தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story