அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு


அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு
x

Image Courtesy: AFP

நீண்ட இழுபறிக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக கெவின் மெக்கார்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற தேர்தல்

அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். அமெரிக்காவை பொறுத்தவரையில் புதிய ஜனாதிபதி பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடந்த 8-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் (மேல்சபை) 105 இடங்களில் 35 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது.

டிரம்ப் கட்சி கைப்பற்றியது

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்கிற நிலையில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம் அதுவரை ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதை தொடர்ந்து, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக இருந்து வந்த ஜனநாயக கட்சியை சேர்ந்த நான்சி பெலோசி உடனடியாக பதவி விலகினார்.

அதிகாரமிக்க பதவிக்கு தேர்தல்

அமெரிக்காவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு பிறகு அதிகாரம் மிக்க பதவி பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் பதவி ஆகும். இதனால் பிரதிநிதிகள் சபையின் அடுத்த சபாநாயகர் யார் என்பதில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த 3-ந் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அதனை தொடர்ந்து பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.

சொந்த கட்சியினரே எதிர்ப்பு

குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி களம் இறக்கப்பட்டார். அதே போல் ஜனநாயக கட்சி சார்பில் அதன் முதல் கருப்பின தலைவர் ஹக்கீம் ஜெப்ரிஸ் போட்டியிட்டார்.

சபாநாயகரை தேர்வு செய்ய 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சிக்கு 222 உறுப்பினர்கள் இருப்பதால் கெவின் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவின் மெக்கார்த்திக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதால் குழப்பம் ஏற்பட்டது. 4 நாட்களில் 14 முறை ஓட்டெடுப்பு நடத்தியும் சபாநாயகரை தேர்வு செய்யமுடியவில்லை.

காரசார வாக்குவாதம்

இதையடுத்து, வாக்கெடுப்பில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்த கெவின் மெக்கார்த்தி தனக்கு எதிராக வாக்களித்து வந்த குடியரசு கட்சி உறுப்பினர்களை அவர்களின் இருக்கைக்கே சென்று, சமாதானம் செய்து தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது அவருக்கும், குடியரசு கட்சி உறுப்பினர்களுக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. எனினும் எதிர்ப்பாளர்களில் ஒரு சிலர் கெவின் மெக்கார்த்திக்கு ஆதரவாக வாக்களிக்க ஒப்புக்கொண்டனர். இதற்கிடையில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான உறுப்பினர்களின் ஆதரவு 218-ல் 215 ஆக குறைக்கப்பட்டது.

சபாநாயகராக தேர்வு

அதை தொடர்ந்து, முன்தினம் நள்ளிரவு 15-வது முறையாக ஓட்டெடுப்பு நடந்தது. இதில் கெவின் மெக்கார்த்திக்கு ஆதரவாக 216 பேர் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பிறகு கெவின் மெக்கார்த்தி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் 55-வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் 1860-ம் ஆண்டுக்கு பிறகு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை சபாநாயகரை தேர்வு செய்வதில் இப்படி ஒரு குழப்பம் ஏற்படுவது இதுவே முதல் முறை ஆகும். 1860-ல் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய 44 முறை வாக்குப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story