வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா- இலங்கை அரசு


வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா- இலங்கை அரசு
x

இலங்கையில் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசா வழங்கும் நடவடிக்கையை இலங்கை அரசு தொடங்கி உள்ளது.

கொழும்பு,

5 ஆண்டு விசா

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுக்க சர்வதேச நாடுகளின் உதவியுடன் திவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, அந்த நாட்டு அரசு.

இதன் ஒரு பகுதியாக இலங்கையில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசாக்களை வழங்கும் திட்டத்தை தொடங்கி உள்ளது. தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கான விசாக்களை பெறுவதற்கு ஆண்டுதோறும் மிகப்பெரும் நடைமுறைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக ஏராளமான ஆவணங்கள் கொடுத்து சரிபார்க்கும் நடைமுறைகள் உள்ளன.

10 முதலீட்டாளர்களுக்கு விசா

இதை தவிர்த்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக 5 ஆண்டு விசா வழங்கும் திட்டத்தை இலங்கை அரசு தொடங்கி உள்ளது. இந்த விசாக்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். இதில் முதற்கட்டமாக 10 முதலீட்டாளர்களுக்கு 5 ஆண்டு விசாக்கள் வழங்கப்பட்டன. இதில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் இலங்கை கிளையான லங்கா ஐ.ஓ.சி. நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா உள்பட 10 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டன.

இந்த திட்டத்தை இலங்கை முதலீடுகள் மேம்பாட்டுத்துறை மந்திரி தம்மிகா பெரேரா தொடங்கி வைத்தார்.

ஜப்பான் உதவ முடிவு

இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தற்போதைய நிலையில் உதவ முடியாது என ஜப்பான் சமீபத்தில் அறிவித்து இருந்தது.

ஆனால் இந்த முடிவை மாற்றியுள்ள ஜப்பான், இலங்கைக்கு உதவுவதாக அறிவித்து உள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்த ஜப்பான் தூதர் மிசுகோஷி ஹைடகி, இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இலங்கையுடனான பொருளாதார, சமூக மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியதாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் ஜப்பான் தூதரகம் தனது பேஸ்புக் தளத்தில், 'இலங்கையின் தற்போதைய கடினமான பொருளாதார சூழல் குறித்து ஜப்பான் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை மக்களுக்கு மருந்து மற்றும் உணவை வழங்குவதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவு திட்டம் வழியாக 3 மில்லியன் டாலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தது.

கேரளாவிடம் உதவி கேட்பு

இதற்கிடையே தங்கள் பொருளாதார நெருக்கடிக்கு உதவுமாறு கேரளாவிடம் இலங்கை அரசு உதவி கேட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னையில் உள்ள இலங்கை துணைத்தூதர் வெங்கடேஷ்வரன், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது கான் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த கோரிக்கையை ஏற்றுள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இலங்கைக்கு உதவ ஒப்புக்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.


Next Story