மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு


மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு
x

கோப்புப்படம்

மியான்மரில் ஆங் சான் சூகியின் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகளை கலைத்து ராணுவ அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

நோபிடாவ்,

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் குற்றம் சாட்டி வந்தது.

இந்த சூழலில் 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி புதிய அரசு பதவியேற்க இருந்த நிலையில், ராணுவம் சதி புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அரசியல் தலைவர்கள் கைது

அதை தொடர்ந்து தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் பலர் கையில் ஆயுதம் ஏந்தினர். அவர்களுக்கும், ராணுவத்துக்கும் மோதல் தொடர்ந்து வருகிறது.

40 கட்சிகள் கலைப்பு

அது ஒருபுறமிருக்க ராணுவ அரசை எதிர்க்கும் அரசியல் எதிரிகளை ஒடுக்க அரசு பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனிடையே அதிகாரத்தை கைப்பற்றி 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வருகிற ஜூலை மாதம் பொதுத்தேர்தலை நடத்த ராணுவ ஆட்சி குழு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைக்கப்படுவதாக ராணுவ அரசால் நியமிக்கப்பட்ட புதிய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

ராணுவ ஆதரவு கட்சி

அந்த கட்சிகள் தேர்தலுக்கு முன்பாக தங்களை பதிவு செய்து கொள்ள தவறியதால் கலைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதன் மூலம் ஜூலையில் நடைபெறும் தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற தொழிற்சங்க ஒற்றுமை மற்றும் வளர்ச்சி கட்சி எளிதில் வெற்றியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் ராணுவ அரசால் நடத்தப்படும் தேர்தல் ஏமாற்று வேலை என்றும், எனவே அதில் தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story