மியான்மர்: தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை


மியான்மர்: தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை
x

கோப்புப்படம்

தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நேபிடாவ்,

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து மியான்மரின் தலைவரான ஆங் சான் சூகியை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் சிறை வைத்தது. ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டன. சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், வாக்கி-டாக்கிகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து வைத்திருந்தது தொடர்பான குற்றச்சாட்டில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை கோர்ட்டு வழங்கி உள்ளது.

மேலும், அரசியல் தலைவர் ஒருவரிடம் இருந்து தங்கம் மற்றும் ஆயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டில் ஊழல் குற்றச்சாட்டில் மியான்மர் ராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஆங் சான் சூகிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.


Next Story