ரஷியாவிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் புதைகுழிகளில் உள்ள உடல்களை தோண்டி எடுக்கும் பணியில் உக்ரைன் வீரர்கள் குழு!


பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்களின் உடல்களை, உக்ரைன் வீரர்கள் கண்டுபிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ்,

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உக்ரேனிய படைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. ரஷிய இராணுவம் எல்லையைத் தாண்டி ரஷியாவிற்குள் பின்தள்ளப்பட்டது. ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

எனினும், ரஷ்யாவிற்குள் இருந்து பீரங்கி குண்டுகள் இன்னும் உக்ரைன் பகுதிகளை குறிவைத்து சுடப்படுகின்றன. அவற்றை கடந்து உக்ரேனிய படைகள் ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் ஊடுருவி முன்னேறி வருகின்றன.

அங்கு போர்க்களத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடல்கள் இன்னும் உள்ளன என்று உக்ரைன் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷிய படைகளின் தாக்குதலில் பலியாவனவர்கள் உடல்கள் விவசாய வயல்வெளிகளிலும், குண்டுவீச்சு தாக்குதலில் சேதமடைந்து எரிந்த நிலையில் உள்ள பல ராணுவ டேங்கர்களுக்கு உள்ளேயும் உடல்கள் காணப்பட்டுள்ளன.

உடல்கள் மற்றும் பதுங்கு குழிகளை தேடுவதற்குப் பயன்படுத்தப்படும் டிரோன்கள் அல்லது ஆளில்லா விமானம் மூலம் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.வெள்ளை நிற பாதுகாப்பு உடைகள் மற்றும் ரப்பர் கையுறைகளை அணிந்து கொண்டு, உக்ரேனிய அவசர சேவை பணியாளர்கள் சனிக்கிழமையன்று மரங்கள் நிறைந்த புதைகுழியில் இருந்து மேலும் உடல்களை தோண்டி எடுத்தனர்.

அங்கு கண்ட காட்சிகளை பற்றி உக்ரைன் வீரர்கள் குழு கூறுகையில்:-

போர்க்களத்தில் உயிரிழந்த இருநாட்டு ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடல்கள் கிடப்பதை அங்கு சென்ற உக்ரைன் குழுவினர், இக்காட்சியை ஆவணப்படுத்துகிறார்கள் அதன்பின், உடல்களை ஒரு பையில் அடைக்கிறார்கள்.தொடர்ந்து, உடல்கள் அப்பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனைகள் நடைபெறும். மேலும் ஆவணப்படுத்தப்பட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, போர் குற்றங்களை விசாரித்து வரும் புலனாய்வாளர்களுக்கு அனுப்பப்படும்.

ரஷிய எல்லையில் இருந்து 2 கி.மீ.க்கும் குறைவான தொலைவில் உள்ள கொசாச்சா லோன் கிராமம், செப்டம்பர் 11 அன்று உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்டது. ரஷிய படைகள் துரத்தப்பட்ட பின், அங்குள்ள உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளில் எஞ்சியிருப்பதைப் பார்க்க திரும்பி வருகின்றனர்.இதையெல்லாம் எப்போது புனரமைப்போம் என்று கூட தெரியவில்லை என்று அவர்கள் புலம்புகின்றனர் என்று உக்ரைன் வீரர்கள் குழு கூறியது.

மேலும், ரஷிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் அந்நாட்டு போலீஸ் அதிகாரிகள் முகாமிட்டு, அங்குள்ள மக்களை சித்திரவதை செய்ததற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியப் படைகள் வெளியேற்றப்பட்ட சில பகுதிகளில் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, குறிப்பாக இசியம் நகரில் தோண்டத்தோண்ட கிட்டத்தட்ட 440 உடல்கள் கிடைத்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் மற்றும் ராணுவ வீரர்களின் உடல்களை, உக்ரைன் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பதாக கூறினார். அவர்கள் ரஷிய படையினரின் சித்திரவதைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.


Next Story