வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா சென்றார் ஜோ பைடன்; கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா?


வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் தென்கொரியா சென்றார் ஜோ பைடன்; கிம் ஜாங்  உன்னை சந்திப்பாரா?
x
தினத்தந்தி 20 May 2022 4:59 PM GMT (Updated: 20 May 2022 5:47 PM GMT)

வடகொரியாவுடனான பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தென்கொரியாவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அவர் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பேச்சுவார்த்தை முறிந்தது

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக உரசல் போக்கு நீடிக்கிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் எந்த பலனும் கிட்டவில்லை. இதனால் இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை முறிந்துபோனது.

இதனிடையே அமெரிக்காவில் டிரம்புக்கு பிறகு கடந்த ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தீவிர முனைப்பு காட்டினார்.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

ஆனால் வடகொரியா அதை பொருட்படுத்தவில்லை. மாறாக தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை திரும்பப்பெற அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தொட ர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது வடகொரியா. அந்த வகையில் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இப்போது வரை 16 முறை ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் ஐ.நா.வால் தடைசெய்யப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளும் அடங்கும்.

அதுமட்டும் இன்றி 2006-ம் ஆண்டு தொடங்கி 2017 வரையில் 6 முறை அணு ஆயுதங்களை சோதித்துள்ள வடகொரியா, மிகவிரைவில் 7-வது அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.

ஜோ பைடன் தென்கொரியா பயணம்

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு ஜோ பைடன் இன்று முதல் முறையாக தென்கொரியாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் புதிய அதிபர் யூன் சுக் இயோலை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். யூன் பதவியேற்ற பிறகு இரு தலைவர்களும் சந்திக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த பேச்சுவார்த்தையில் வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டம் குறித்தும் அவற்றால் எழக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜோ பைடனின் இந்த வருகை அமெரிக்க-தென் கொரியா கூட்டணியை வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என அதிபர் யூன் சுக் இயோல் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கிம் ஜாங் அன்னை சந்திப்பாரா?

அதே வேளையில் ஜோ பைடனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் தென்கொரிய மண்ணில் இருக்கும்போது வடகொரியா அணு ஆயுதம் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா உளவுத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர்.

முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு தென்கொரியா சென்றிருந்த அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப், திடீரென முன்அறிவிப்பின்றி வடகொரியா-தென்கொரியா இடையே உள்ள ராணுவம் விலக்கப்பட்ட பகுதி சென்று, கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்தார். அதை போல ஜோ பைடனும் தற்போது கிம் ஜாங் அன்னை சந்திப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

எனினும் ஜோ பைடன்-கிம் ஜாங் உன் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டை நடத்துவதற்கு வடகொரியா ஆர்வம் காட்டுவதாக அமெரிக்கா எந்த அறிகுறியையும் காணவில்லை என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார். அவரும் ஜனாதிபதி ஜோ பைடனும் தென்கொரியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story