வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளது - ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்


வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளது - ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல்
x

Image Courtacy: ANI

வடகொரியா ஏவுகணையை ஏவ வாய்ப்புள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

டோக்கியோ,

கொரிய தீபகற்பத்தில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை என வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உள்ளது. இது தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் கடற்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது.

இந்த சூழலில் ஜப்பான் அரசாங்கத்துக்கு வடகொரியா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில் ராணுவ உளவு முயற்சியின் ஒருபகுதியாக முதன் முறையாக செயற்கைக்கோள் ஒன்றை ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அனுப்ப உள்ளதாக வடகொரிய அரசாங்கம் கூறியது. ஐ.நா.வின் தடையை மீறி ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தங்களது நாட்டுக்கு மிகுந்த அச்சுறுத்தல் என ஜப்பான் தெரிவித்திருந்தது. மேலும் தங்களது நாட்டின் எல்லைக்குள் இந்த செயற்கைகோள் அல்லது விண்வெளி குப்பைகள் நுழைந்தால் அதனை சுட்டு வீழ்த்துமாறு ஜப்பான் பாதுகாப்பு மந்திரி யசுகாசு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டிருதார்.

இந்நிலையில் வடகொரியா ஏவுகணையை ஏவிவிட்டதாக தகவல் வெளியானைதைத் தொடர்ந்து, ஒகினாவாவின் தெற்குப் பகுதியில் ஜப்பான் தனது ஏவுகணை எச்சரிக்கை அமைப்பைச் செயல்படுத்தியது. மேலும் "தயவுசெய்து கட்டிடங்களுக்குள் அல்லது நிலத்தடிக்குள் தங்குமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்தது.

எச்சரிக்கை விடுக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு, எச்சரிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் டுவீட் செய்தது. முன்னதாக அறிவிக்கப்பட்ட ஏவுகணை ஜப்பானுக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் வட கொரியா இன்று (புதன்கிழமை) தெற்கு நோக்கி விண்வெளி செயற்கைக்கோளை ஏவியது என்றும், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் அவசர எச்சரிக்கைகள் மற்றும் சுருக்கமான வெளியேற்ற எச்சரிக்கைகளை விடுக்கப்பட்டது என்றும் தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளாதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) வெளியிட்ட தகவல்படி, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது நாட்டின் விண்வெளி நிறுவனத்திற்கு இராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகளை இறுதி செய்யுமாறு உத்தரவிட்டார் என்று தெரிவித்திருந்தது.


Next Story