தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை


தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை
x

தென்கொரியா எல்லை அருகே வடகொரியா பீரங்கி குண்டுகளை வீசி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சியோல்,

சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் கொரோனா தொற்று காரணமாக மோசமான நிலையை அடைந்துள்ள பொருளாதாரத்தை கவனிக்காமல் வடகொரியா தொடர்ந்து ராணுவ திறனை வலுப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை வடகொரியா சோதித்தது உலக நாடுகளை அதிரவைத்தது. அதன் தொடர்ச்சியாக 5 ஆண்டுகளுக்கு பிறகு அணு குண்டு சோதனையை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

இந்த நிலையில் வடகொரியா நேற்று முன்தினம் தென்கொரியா எல்லைக்கு அருகில் பீரங்கி குண்டுகளை கடலில் வீசி சோதித்ததாக தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.

இதுகுறித்து தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடகொரியா மீதான கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் உறுதியான ராணுவ தயார்நிலையை பேணுகிறது. இந்த சூழலில் வடகொரியாவின் எல்லையில் ஞாயிறு காலை பீரங்கி குண்டுகள் வெடிக்கும் சத்தம் தொடர்ந்து கேட்டது. சில மணி நேரங்கள் இந்த சத்தம் தொடர்ந்தது" என்று தெரிவித்துள்ளது.

கிம் ஜாங் அன் உறுதிமொழி

பொதுவாக வடகொரியாவின் பீரங்கி சோதனைகள் அதன் ஏவுகணை சோதனைகளை விட குறைவான கவனத்தை ஈர்க்கின்றன.

ஆனால் தற்போது வடகொரியாவின் எல்லையில் இருந்து 40-50 கி.மீ. தொலைவில் உள்ள தென்கொரியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட பெருநகர பகுதிக்கு அருகில் பீரங்கி குண்டு சோதனை நடத்தப்பட்டிருப்பது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பேசிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க ராணுவ திறனை அதிகரிக்க உறுதிமொழி எடுத்தது குறிப்பிடத்தக்கது.


Next Story