வட கொரியா தொடர்ந்து அடாவடி- மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை


வட கொரியா  தொடர்ந்து அடாவடி- மேலும் 2 ஏவுகணை ஏவி சோதனை
x

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது.

சியோல்,

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனை போன்றவைகளை நடத்தி அச்சுறுத்தி வரும் வடகொரியாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்துள்ளன.

ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கடந்த வாரம் கொரிய தீபகற்பத்தில் பிரமாண்ட கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டது.

இது வடகொரியாவுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தனது ஏவுகணை சோதனையை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட செயற்கையாக ரேடியோக்டிவ் சுனாமியை ஏற்படுத்தும் ஆயுதத்தை கடலுக்கு அடியில் செலுத்தி சோதித்து பார்த்து அதிரவைத்தது. தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் வடகொரியா இன்று மேலும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்து பார்த்துள்ளது.

வடகொரியாவின் கிழக்குப் பகுதியில் அந்நாட்டு நேரப்படி காலை 7.47 மற்றும் 8 மணிக்கு இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது. ஜப்பானின் பொருளாதர மண்டலத்தை தாண்டி கடலில் ஏவுகணை விழுந்ததாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென்கொரியாவின் புசன் துறைமுகத்திற்கு அமெரிக்ககாவின் போர்க்கப்பல் நங்கூரம் இட்டுள்ள நிலையில் வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.


Next Story