அதிகாலை 3 மணிக்கு மேல் வேண்டாம்... டுவிட்டர் சி.இ.ஓ. லிண்டா; எலான் மஸ்கின் பதில் என்ன..?


அதிகாலை 3 மணிக்கு மேல் வேண்டாம்... டுவிட்டர் சி.இ.ஓ. லிண்டா; எலான் மஸ்கின் பதில் என்ன..?
x
தினத்தந்தி 13 May 2023 1:21 PM GMT (Updated: 13 May 2023 2:11 PM GMT)

அதிகாலை 3 மணிக்கு மேல் வேண்டாம் என எலான் மஸ்கிடம் டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. யக்காரினோ கேட்டு கொண்டார்.

வாஷிங்டன்,

சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் எலான் மஸ்க்கின் கைவசம் போனது. அவர் 44 பில்லியன் டாலர் கொடுத்து அதனை விலைக்கு வாங்கினார். டுவிட்டரின் புதிய உரிமையாளர் ஆனபின் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். பலரை பதவியில் இருந்து நீக்கினார்.

டுவிட்டரின் புதிய சி.இ.ஓ.வாக தன்னை அறிவித்து கொண்டார். எனினும், டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை பதவியில் நீடிப்பது பற்றிய கருத்துக்கணிப்பு முடிவில், அந்த பதவியில் இருந்து விலகினார். ஆனால், புதிய சி.இ.ஓ.வை நியமிக்கவில்லை. அதற்கான தேடலில் ஈடுபட்டு உள்ளேன் என கூறினார்.

இந்த நிலையில், டுவிட்டரின் புதிய சி.இ.ஓ. பற்றிய அறிவிப்பை மஸ்க் சமீபத்தில் வெளியிட்டார். டுவிட்டருக்கான புதிய தலைவர் தேடல் பற்றி கூறிய மஸ்க், அதன் பின்னர் அவர் அறிவித்த ஒரேயொரு வேட்பாளர் யக்காரினோ மட்டுமே ஆவார். இதனால், போட்டியாளர்கள் யாரும் இன்றி எளிதில் இந்த பதவியை யக்காரினோ பெற்று உள்ளார். அடுத்த 6 வாரங்களில் அவர் பதவியில் சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 ஆண்டுகளாக என்.பி.சி. யூனிவர்சலில் பணியாற்றிய அனுபவம் கொண்ட யக்காரினோ, மஸ்க்குடன் நீண்டகால தொடர்பை கொண்டவர்.

உண்மையில், பேட்டி ஒன்றில், மஸ்க்கை தனது வழிக்கு கொண்டு வந்தவர் அவர். கடந்த 2022-ம் ஆண்டு என்.பி.சி. யூனிவர்சலின் விளம்பர பிரிவின் சி.இ.ஓ.வாக இருந்த யக்காரினோ, மஸ்க்கிடம் பேட்டி எடுத்து வரும்படி கூறப்பட்டார்.

அப்போது டுவிட்டரை வாங்குவது பற்றிய பரிசீலனையில் மஸ்க் இருந்துள்ளார். டுவிட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி பேச வேண்டும் என மஸ்க் விரும்பிய சில நபர்களில் யக்காரினோவும் ஒருவர்.

இந்த பேட்டியின்போது, மஸ்க்கிடம் பேசிய அவர், அதிகாலை 3 மணிக்கு பின்னர் டுவிட் செய்ய வேண்டாம். அது தனக்கு வருத்தம் அளிக்கிறது. பின்னிரவு டுவிட் பதிவுகளால், சர்ச்சை ஏற்படுகிறது. அது டுவிட்டரின் மதிப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என யக்காரினோ கூறியுள்ளார்.

ஆனால், சிலர் விரும்பவில்லை என்பதற்காக அதனை நிறுத்த போவதில்லை. எனது பாலோயர்களுடன் நேரிடையாக தொடர்பு கொள்வது எனது வழக்கம் என கூறியுள்ளார்.

ஆனால், டுவிட்டரின் உரிமையாளர் என்ற பொறுப்பு உள்ள நிலையில் அதிக கவனமுடன் பேச வேண்டும் என மஸ்கிற்கு, யக்காரினோ அறிவுரை வழங்கினார். இரவு நேர டுவிட் பதிவால், புதிய விளம்பரங்கள் வராமல் போகலாம் என கூறியுள்ளார். முடிவில், யக்காரினோ வேண்டுகோளை மஸ்க் ஏற்றார்.

அதிகாலை 3 மணிக்கு மேல் டுவிட் பதிவை குறைத்து கொள்ள பார்க்கிறேன் என கூறிய அவர், ஆனால், நான் என்ன கூறலாம் அல்லது கூற கூடாது என மற்றவர்கள் எனக்கு அறிவுரை கூறுவதற்கு அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். அதனால் பேச்சு சுதந்திரம் மறைந்து விடும் என்றும் அப்போது மஸ்க் கூறியுள்ளார்.


Next Story