இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம் -பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்


இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம் -பாகிஸ்தான் பிரதமர்  ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Jan 2023 7:26 AM GMT (Updated: 17 Jan 2023 7:36 AM GMT)

இந்தியா மீது போர் தொடுத்து நாங்கள் சரியான பாடம் கற்றுக்கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

இஸ்லாமாபாத்:

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது.

இந்த் நிலையில் இந்தியாவுடன் நடந்த போரில், பல பாடங்களை கற்று கொண்டோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.இது தொடர்பாக 'அல் அரேபியா' டிவி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் அமைதியையே விரும்புகிறது. நம்மிடம் பொறியாளர்கள், டாக்டர்கள் மற்றும் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இந்த விலைமதிப்பற்ற சொத்துகளை முறையாக பயன்படுத்தி, வளர வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

அமைதியான முறையில் வாழ்வதும், முன்னேறுவதும் அல்லது ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதும் இரு நாடுகளின் விருப்பம்

அமைதியாக வாழ்ந்து வளர்ச்சி பெறுவதா அல்லது ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டு நமது நேரத்தையும், வளத்தையும் வீணடிப்பாதா என்பது நம் கைகளில் தான் உள்ளது.

நாங்கள் இந்தியாவுடன் மூன்று போர்களை நடத்தியுள்ளோம், மேலும் அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்துள்ளன.

போரின் மூலம் பல பாடங்களை நாங்கள் கற்று கொண்டோம்.அமைதியாக வாழ்ந்து, இந்தியாவுடன் உள்ள பிரச்னையை சுமூகமாக தீர்த்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் வளங்களை, வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மூலம் வீணடிக்க விரும்பவில்லை. இரு நாடுகளும் அணு ஆயுத நாடுகள் தான். ரு நாட்டு ராணுவங்களிடம் பல அதிநவீன ஆயுதங்கள் உள்ளன.இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், மிகப்பெரிய இழப்பு ஏற்படும். யாராலும் உயிர் பிழைக்க முடியாது.

இந்தியாவுடன் அமைதியான உறவை விரும்புகிறோம். அப்போது தான் இரு நாடுகளும் வளர முடியும். காஷ்மீர் போன்ற பல்வேறு எரியும் பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் நேர்மையாக பேச வேண்டும்.இந்திய பிரதமர் மோடிக்கு எனது செய்தி என்னவென்றால், காஷ்மீர் போன்ற பிரச்சினைகளை தீர்க்க நேர்மையான பேச்சுக்களை நடத்துவோம் என கூறினார்.


Next Story