"பற்றி எரியும் பாகிஸ்தான்" பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் நடிகை புகார் டெல்லி போலீசார் பதில்


பற்றி எரியும் பாகிஸ்தான் பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் நடிகை புகார் டெல்லி போலீசார் பதில்
x

இம்ரான் கானின் கைது, பாகிஸ்தானில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இஸ்லாமபாத்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு நேரில் ஆஜராக வந்தபோது, ராணுவத்தால் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் கைது, அவரின் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதேசமயம் இம்ரான் கான் மீதான கைது நடவடிக்கைக்கு ``தேசிய கருவூலத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதன் காரணமாக இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்" என பாகிஸ்தான் உள்துறை மந்திரி ரானா சனானுல்லா விளக்கமளித்தார்.

இந்த் நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் பிரதமர் மோடிக்கு எதிராக புகாரளிக்க வேண்டும் எனக் கூறியிருப்பதும், அவருக்கு டெல்லி போலீசின் பதிலும் பலரைத் திடுக்கிட வைத்திருக்கிறது.

முன்னதாக பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி (Sehar Shinwari) என்பவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ``டெல்லி போலீசாரின் ஆன்லைன் முகவரி யாருக்காவது தெரியுமா... எனது நாடான பாகிஸ்தானில் குழப்பத்தையும், தீவிரவாதத்தையும் பரப்பும் இந்திய பிரதமர், இந்திய உளவு அமைப்பின் (RAW) மீது நான் புகாரளிக்க வேண்டும்.

இந்திய நீதிமன்றங்கள் சுதந்திரமாக இருக்கும் பட்சத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எனக்கு நீதி வழங்கும் என்று நான் நம்புகிறேன்" என்று டுவீட் செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் நடிகையின் டுவீட்டுக்கு டுவிட்டரில் பதிலளித்த டெல்லி போலீஸ், ``நாங்கள் பயந்துவிட்டோம். பாகிஸ்தானில் இன்னும் நாங்கள் அதிகாரத்தைப் பெறவில்லை. ஆனால், நாங்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்.

உங்கள் நாட்டில் இணையதளம் முடக்கப்பட்டிருக்கும்போது நீங்கள் எப்படி டுவீட் செய்கிறீர்கள்" எனக் கேட்டிருப்பது பலரிடையே சிரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Next Story