பெரு: தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து - 2 வீரர்கள் பலி


பெரு: தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து - 2 வீரர்கள் பலி
x

விமான ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதி விபத்து ஏற்பட்டது.

லிமா,

பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் இருந்து 102 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றது. அப்போது ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது.

இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்தனர். ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது. விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினார்கள்.

உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்தனர். விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.இந்த விபத்தில் தீயணைப்பு படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறும்போது, "உள்நாட்டு விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர். பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. என்றனர்.


1 More update

Next Story