ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தல்


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு: உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தல்
x

உஸ்பெகிஸ்தானில் நடந்த 8 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்.

சமர்கண்ட்,

இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடந்தது.

உச்சி மாநாடு

கொரோனா பெருந்தொற்றால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுதான் உச்சி மாநாடு, தலைவர்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் அழைத்ததின் பேரில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் அங்கு 2 நாள் பயணமாக சென்றார்.

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் தலைவர்களுடன் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டார்.

புதினுடன் சந்திப்பு

இந்த மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை பிரதமர் மோடி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்த பின்னர் இரு தலைவர்களும் சந்தித்து பேசியது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். அது மட்டுமின்றி, பிராந்திய விஷயங்கள், உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

உக்ரைன் போருக்கு முடிவு...

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவும், பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி ரஷிய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கூறுகையில், "இது போருக்கான காலம் அல்ல. நான் உங்களிடம் தொலைபேசி அழைப்பின்போது பல முறை இதைப் பேசி இருக்கிறேன். ஜனநாயகம், ராஜதந்திரம், பேச்சுவார்த்தை ஆகியவை உலகை ஒன்றாக வைத்திருக்கும்" என வலியுறுத்தினார்.

மோடியிடம் புதின் கூறும்போது, "நமது வர்த்தகம் வளர்ந்து வருகிறது. இந்திய சந்தைக்கு ரஷிய உரங்கள் வினியோகம் 8 மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவில் விவசாய துறைக்கு மிகப்பெரிய உதவியாக அமையும்" என குறிப்பிட்டார்.

துருக்கி அதிபருடன் பேச்சு

துருக்கி நாட்டின் அதிபர் எர்டோகனையும், இந்த உச்சி மாநாட்டுக்கு மத்தியில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இரு தரப்பு மக்களின் நலனுக்காக பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்கள் விவாதித்தனர்.

இரு தலைவர்களும் பயனுள்ள விவாதங்கள் நடத்தியதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.

மாநாட்டில் மோடி பேசியது என்ன?

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பின்னர், பொருளாதாரத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் பெரும்சவால்களை சந்தித்து வருகின்றன. இந்த தருணத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். உலகளாவிய பொருளாதாரத்துக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் சுமார் 30 சதவீதம் பங்களிப்பு செய்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளில் வாழ்கிறார்கள்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு இடையே மிகப்பெரிய ஒத்துழைப்புக்கும், பரஸ்பர நம்பிக்கைக்கும் இந்தியா ஆதரவு அளிக்கிறது.

வினியோகம் பாதிப்பு

உலகளாவிய வினியோக சங்கிலியில் பெருந்தொற்றும், உக்ரைன் நெருக்கடியும் பல தடைகளை ஏற்படுத்தி விட்டன. இதனால் ஒட்டுமொத்த உலகமும் இதுவரையில்லாத வகையில் எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை சந்தித்து வருகின்றன. நமது பிராந்தியத்தில் நம்பகமான, மீள்தன்மையுடைய, பல தரப்பட்ட வினியோக சங்கிலிகளை மேம்படுத்துவதற்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு சிறப்பான இணைப்பு தேவைப்படுகிறது. நாம் ஒருவருக்கொருவர் சரக்கு போக்குவரத்துக்கான முழு உரிமையை கொடுப்பது முக்கியம்.

இந்தியா உற்பத்தி மையம்

நாங்கள் இந்தியாவை உற்பத்தி மையமாக ஆக்குவதில் முன்னேற்றம் கண்டுவருகிறோம். இந்த ஆண்டு இந்தியா 7½ சதவீத பொருளாதார வளர்ச்சியை அடையும் என்று எதிர்பார்க்கிறோம். இது உலகின் முன்னணி பொருளாதார வளர்ச்சியில் ஒன்றாகும்.

இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தொழில் ('ஸ்டார்ட் அப்') நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 100 நிறுவனங்கள் யூனிகார்ன் நிறுவனங்கள் (ஏறத்தாழ ரூ.8 ஆயிரம் கோடி மதிப்புடையவை) ஆகும்.

எங்கள் அனுபவம், பிற உறுப்பு நாடுகளுக்கு பயன் அளிக்கத்தக்கதாகும். இதற்காக நாங்கள் எங்கள் அனுபவத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும், புதிய சிறப்பு பணிக்குழுவை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம்.

சிறுதானியங்கள் மேம்பாடு

இன்று உலகம் மற்றொரு முக்கிய சவாலை சந்தித்து வருகிறது. அது, நமது மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இந்த பிரச்சினைக்கு சாத்தியமாகிற ஒரு தீர்வு, சிறுதானிய வகைகளை பயிரிடுவதையும், அவற்றைப் பயன்படுத்துவதையும் அதிகரிப்பதாகும்.

சிறு தானிய வகைகள் மிகச்சிறப்பான உணவுகளாக, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக சாகுபடி செய்யக்கூடியவையாக இருக்கின்றன. இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளில் கலாசாரமாக, சத்தானதாக, உணவு நெருக்கடியை கையாள்வதில் மலிவு விலை மாற்றாக அமைந்துள்ளது.

2023-ம் ஆண்டு, ஐ.நா. சர்வதேச சிறுதானிய உணவு ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்கீழ் நாம் சிறுதானிய உணவு திருவிழா நடத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

மருத்துவ சுற்றுலா

இந்தியா இன்றைக்கு மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கு குறைந்த செலவில் செல்லக்கூடிய இடமாக அமைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் குஜராத்தில் பாரம்பரிய மருந்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய மையம் தொடங்கப்பட்டது. இது பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக சுகாதார அமைப்பின் முதல் மற்றும் ஒற்றை மையம் ஆகும்.

நாம் பாரம்பரிய மருத்துவத்தில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். இதற்காக புதிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பணிக்குழுவை உருவாக்க இந்தியா முயற்சி எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கு வாழ்த்து

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர் பதவியை வரும் ஆண்டில் இந்தியா ஏற்பதற்கு ரஷிய அதிபர் புதினும், சீன அதிபர் ஜின்பிங்கும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story