பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி யார்? நவாஸ் ஷெரீபுடன் பிரதமர் ஆலோசனை


பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி யார்? நவாஸ் ஷெரீபுடன் பிரதமர் ஆலோசனை
x

பாகிஸ்தான் புதிய ராணுவ தளபதியாக யாரை நியமனம் செய்வது என்பது குறித்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப், லண்டனில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

ராணுவ தளபதி ஓய்வு

பாகிஸ்தானின் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா வரும் 29-ந்தேதி பணி நிறைவு செய்து ஓய்வு பெறுகிறார். அதற்கு முன் புதிய ராணுவ தளபதி நியமனம் செய்யப்பட வேண்டும். பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ராணுவ தளபதி பதவி என்பது அதிகாரம் மிகுந்த பதவி ஆகும். எனவே கமர் ஜாவத் பஜ்வா இடத்துக்கு தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசு யாரைக்கொண்டு வரப்போகிறது என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

முன்னாள் பிரதமருடன் பிரதமர் ஆலோசனை

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், எகிப்து நாட்டுக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். அந்தப் பயணத்தை அவர் முடித்துக்கொண்டு முன்தினம் லண்டன் சென்றார். அங்கு அவர் தனது சகோதரரும், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது கட்சியின் துணைத்தலைவரும் நவாஸ் ஷெரீபின் மகளுமான மரியம் நவாசும் உடன் இருந்தார்.

புதிய ராணுவ தளபதி நியமனம்

அப்போது நாட்டின் அரசியல் விவகாரங்கள், புதிய ராணுவ தளபதி நியமன பிரச்சினை உள்ளிட்டவை குறித்து அவர்கள் நீண்டதொரு ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அங்கு நிருபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், அவர்களிடம், "பாகிஸ்தானின் ராணுவ தளபதி நியமனம் என்பது அரசியல் சாசன விவகாரம் ஆகும். எனவே அரசியல் சாசனத்துக்கு ஏற்றபடி இதில் முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் மிக மூத்த அதிகாரியை ராணுவ தளபதியாக நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி சேனல் ஒன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளபதி நியமன விவகாரத்தில் கூட்டணிக்கட்சிகளிடையே பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ மந்திரி தகவல்

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவஜா ஆசிப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர், "புதிய ராணுவ தளபதி நியமனம் குறித்து நவாஸ்- ஷபாஸ் ஷெரீப் லண்டனில் பேசி முடிவு எடுத்ததாக ஊடகங்களில் ஊகச்செய்திகள் வெளியாகின்றன. இது தொடர்பான விவாதம் நடந்தது, ஆனால் இதில் அரசியலமைப்பு செயல்முறை தொடங்கிய பிறகு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் " என கூறி உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தகுதியின் அடிப்படையில்தான் புதிய ராணுவ தளபதியை நியமிக்க வேண்டும் என்று கூறி இருப்பதுடன், இதில் நவாஸ் ஷெரீபும், ஷபாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசியதை விமர்சித்துள்ளார்.


Next Story